தற்கொலைக்கு முயற்சிக்கும் அதிகமானோர் தேர்ந்தெடுப்பது எலிக்கு வைக்கப்படும் விஷத்தைத்தான். இந்த விஷத்தை சாப்பிட்டவர்கள் உயர் சிகிச்சை அளித்தும் உயிர் பிழைப்பதில்லை. அதனால் இது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கடைகளிலும் சாதாரணமாக கிடைக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலர் இந்த விஷம் சாப்பிட்ட நிலையில், இந்த விஷத்தை விற்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமார் மாவட்டத்தின் பல பகுதிகளில் சோதனை செய்ய உத்தரவிட்டார். இந்த சோதனையில் எலி பேஸ்ட் விற்பனை செய்த 50க்கும் மேற்பட்ட மளிகை கடை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட எலிபேஸ்ட் பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது..
விவசாய பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யும் கடைகளில் மட்டுமே எலி விஷம் விற்பனை செய்ய அனுமதி உள்ளது. ஆனால் மளிகை\ கடைகள், பெட்டிக்கடைகளில் கூட எலி பேஸ்ட் விற்பனை செய்யப்படுவதால் எளிமையாக வாங்கி தற்கொலை முயற்சி செய்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமார் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடியாக நடத்திய சோதனையில் பலர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.