தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (24-12-24) சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு, சென்னை வேப்பேரி பெரியார் திடலில் டிஜிட்டல் நூலகம் ஆய்வு மையத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் என்ன என்று கேலி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும். தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். தாய் வீட்டுக்கு வருகிற போதெல்லாம், எழுச்சியை தொடர்ந்து பெறுவது உண்டு. ஆண்டு ஆண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழ் மண், ஒற்றுமை பெறவும், சுயமரியாதை உணர்வு பெற்று மேலெழுந்து நிற்கவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு பல்வேறு தியாகங்களை புரிந்து நம்முடைய இனத்திற்காக அயராது உழைத்த நம்முடைய ஈரோடு சிங்கம் தந்தை பெரியாரின் மறைந்த இந்த நாளில், அவருடைய வாழ்க்கை வரலாற்றை நம்முடைய இளைய சமுதாயத்தினருக்கு எடுத்து செல்கிற வகையில் டிஜிட்டல் மையமாக இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
தந்தை பெரியார் தன்னுடைய பயணத்தை முடித்துக் கொண்டார், நாம் அதை தொடர்வோம் என்று கலைஞர் கூறினார். தந்தை பெரியாரின் தொண்டர்களாகிய நாம், அந்த பயணத்தை தொடங்கி இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறோம். அவர் வாழ்ந்த காலத்தில், அவர் பேசிய முற்போக்கு கருத்துக்களுக்காக பழமைவாதியிடம் இருந்தும், பிற்போக்குவாதியிடம் இருந்து பல்வேறு வகையான எதிர்ப்பை அவர் சந்தித்தார். ஊருக்குள் வர தடை, பேச தடை, கோயிலுக்குள் நுழைய தடை, எழுத தடை, பத்திரிகை நடத்த தடை என அத்தனை தடைகளையும் உடைத்து உலகில் உள்ள அனைவருடைய மனதிலும் அவர் நுழைந்திருக்கிறார். இது தான் பெரியார். தந்தை பெரியாருடைய கருத்துக்களை, இன்றைக்கும் வரைக்கும் எல்லா மக்களிடம் கொண்டு சென்று என்றென்றும் வாழ்கிறார் என்ற நிலையை உருவாக்கி வைத்திருப்பவர் நம்முடைய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி. இந்த 90 வயதிலும் பயணத்தை மேற்கொண்டு சுற்றி வருவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. பெரியாரை உலகமயமாக்கி உலகின் சொத்தாக மாற்றி இருக்கிறோம்” என்று கூறினார்.