தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஜெர்மனியின் ஹனோவர் நகரில் நாளை (30/05/2022) முதல் வரும் ஜூன் 2- ஆம் தேதி வரை தொழிற் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
ஆற்றல், உற்பத்தி, நெட்வொர்க்கிங், மின்சார வாகனங்கள் உற்பத்தி, லாஜிஸ்டிக் உள்ளிட்டத் துறைகளில் முதலீட்டாளர்களை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட பூஜா குல்கர்னி இ.ஆ.ப. தலைமையிலான அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை மாதம் அமெரிக்கா செல்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக, தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.