வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுவிழக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்தது. பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது.
தென்காசியில் நாளை(14/11/2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மட்டுமல்லாது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை அடுத்துள்ள காரிசாத்தான் என்ற இடத்தில் தரைப்பாலத்தை மூழ்கடிக்கும் வகையில் வெள்ள நீர் பாய்ந்து ஓடுகிறது. ஆபத்தை உணராமல் அந்த பகுதி மக்கள் வெள்ள நீரைக் கடந்து வருகின்றனர்.
நிட்சேப நதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதன் கிளை நதி தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள காரிசாத்தான் எனும் கிராமத்தில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் ஆபத்தை உணராமல் அந்த பகுதியைக் கடந்து வருகின்றனர்.