'திருவள்ளுவர் உள் ஒளி மிக்க ஆன்மீகவாதி' என கூறிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு 'உளறல்களை நிறுத்துங்கள்' என எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ''திருவள்ளுவர் உள் ஒளி மிக்க ஆன்மீகவாதி. திருக்குறளின் முதல் குறளில் ஆதி பகவன் என எழுதியிருக்கிறார் திருவள்ளுவர். ஆதிபகவன் தான் இந்த உலகைப் படைத்தார் அதைத்தான் திருவள்ளுவர் கூறுகிறார். ஆனால் திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு.போப் திருக்குறளில் உள்ள ஆன்மீக சிந்தனைகளை நீக்கிவிட்டார். மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல் இருக்கிறது'' என பேசியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு எம்.பி சு.வெங்கடேசன் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே, கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள். ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உளறல்களை நிறுத்துங்கள்."