மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வில் 497 எம்பிபிஎஸ், 110 பிடிஎஸ் என அனைத்து இடங்களையும் மாணவர்கள் எடுத்துள்ளனர். இதில் ஒன்றிரண்டு மாணவர்களே இந்த ஆண்டு பள்ளியில் படித்து இதே ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க சீட்டு வாங்கியுள்ளனர். இவர்களும் தனியார் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர். மற்ற அனைவருமே கடந்த ஒரு வருடம் இரண்டு வருடங்களுக்கு முன்பு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பயிற்சி பெற்று தேர்ச்சியடைந்தவர்களாக உள்ளனர்.
இதில் 50% கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை செய்வோர்களாக இருப்பதால் தங்கள் பிள்ளைகளின் மருத்துவர் கனவை நினைவாக்க வட்டிக்கு கடன் வாங்கி பயிற்சி மையங்களுக்கு அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்கச் செல்லும் 21 மாணவ, மாணவிகளில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு படித்து இதே வருடம் நீட் தேர்ச்சி பெற்று நீலகிரி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவர் அறிவுநிதி நம்மிடம் பேசுகையில்,
''என் கனவு மருத்துவம். எங்கள் குடும்பம் தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படிக்க வைக்கும் வசதியான குடும்பம் இல்லை. அதனால் +1 தொடங்கியதுமே சில யூ டியூப்கள் மூலம் நீட் பாடங்களைத் தொடர்ந்து கவனித்து படிச்சேன். எனக்கு உதவியாக இருந்தது. இப்படி இணைய வழியில் படிக்கலாம் என்று கூட எனக்கு யாரும் வழிகாட்டவில்லை. என் சொந்த முயற்சியில் தான் படித்தேன். அதனால் எனக்கு நல்ல பலனைக் கொடுத்துள்ளது. அதனால் ஏழை மாணவர்கள், நல்ல இணைய வழி பயிற்சிகள் உள்ளது. அதனை +1 படிக்கும் போதே படிக்கத் தொடங்கினால் சில மாதம் கோச்சிங்க்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை'' என்றார்.
அரசு பயிற்சிக்கு போய் இருக்கலாமே? என்ற கேள்விக்கு, “விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மொத்தமே 4 நாட்கள் நீட் கோச்சிங் வகுப்பு நடந்தது. அதிலும் டாப்பர்ஸ் என்று மாணவர்களைத் தேர்வு செய்து வகுப்பு நடந்தது. அதனால் எனக்கு பயனில்லை. காரணம் பள்ளி ஆசிரியர்களுக்குப் பள்ளி பாடம் நடத்திவிட்டு நீட் கோச்சிங் கொடுப்பது அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தது. அதனால் அரசு தனியாகவே பயிற்சியாளர்களை நியமித்து நீட் கோச்சிங் கொடுத்தால் என்னைப் போன்ற ஏழை மாணவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி பயிற்சிக்கு போகாமல், அரசு பயிற்சி மையத்திலேயே பயிற்சி பெறலாம். ஏழை மாணவர்களுக்காக 7.5% உள் இட ஒதுக்கீடு கொடுத்தது போல தனியாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நீட் கோச்சிங் கொடுக்க அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யும்போது தான் நடப்பு ஆண்டு மாணவர்கள் உடனடியாக நீட் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க முடியும்'' என்றார்.