
சிதம்பரம் கலைக்கல்லூரியில் அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வு முடிவு குளறுபடிகளைக் கண்டித்து மாணவர் சங்கம் வகுப்பு புறக்கணிப்பு.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் கடந்த வாரம் தேர்வு முடிவு வெளியானது. இதில் பல்வேறு மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். ஆனால் அவர்களுக்குத் தேர்வு எழுதவில்லை எனத் தேர்வு முடிவில் வந்துள்ளது. அதேபோல் எழுதாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் போட்டு அரியர் என்று வந்துள்ளது. மேலும் நன்றாக எழுதிய மாணவர்களுக்கு பூஜ்ஜியம் மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண் போட்டு அரியர் என வந்துள்ளது. மறுமதிப்பீடு செய்யலாம் என்றால் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத் தொகை, இளங்கலை மாணவர்களுக்கு ரூ.400, முதுகலை மாணவர்களுக்கு ரூ.800 என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தேர்வு முடிவுகளில் இருக்கும் குளறுபடிகளைச் சரி செய்யக் கோரியும், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத் தொகையை நீக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசு கலைக் கல்லூரியில் திங்களன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளைச் செயலாளர் அவினேஷ் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் லெனின் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் சௌமியா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மேலும் கல்லூரி கிளை உறுப்பினர்கள் அஜித்குமார், கார்த்திகேயன், ராஜ்குமார், அரவிந்தன், சூர்யா, கதிர், சிவகுரு, தமிழ்மணி, பாரி மற்றும் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.