வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனி தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக அதிமுகவில் கஸ்பா.மூர்த்தி என்பவரை அறிவித்துள்ளது அதிமுக தலைமை. அவர் கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதிமுக வேலூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரமேஷ்குமார் என்பவர் சுயேட்சையாக களமிறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் மார்ச் 20ந்தேதி வேட்புமனுதாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரமேஷ்குமாரிடம் கேட்க தொடர்புகொண்டு பேசியபோது, 30 ஆண்டுகாலமாக கட்சியில் இருக்கிறேன். 25 வருடமானது எனக்கு இந்த மாணவர் அணி செயலாளர் பதவிக்கு வருவதற்கு 2011 – 2016 வரை மாவட்ட கவுன்சிலராக இருந்தேன். கடந்த 2006, 2011, 2016 என மூன்று முறையாக எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட சீட் கேட்கிறேன். 2016ல் நேர்காணலுக்கு சென்று ஜெ.வை சந்தித்துவிட்டு வந்தேன், நீ தான் வேட்பாளர் எனச்சொல்லி அனுப்பினார். ஆனால், இப்போதும் அப்போதும் அமைச்சராகவும், மேற்கு மா.செவாகவும் உள்ள வீரமணி, அம்மாவிடம் சொல்லி வேட்பாளரை மாற்றினார்.
அவர் சிபாரிசில் வந்தவர் தான் ஜெயந்திபத்மநாபன். அவரே பின்னர் வீரமணிக்கு எதிரியானார். என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்டுவதிலேயே குறியாகவுள்ளார். அம்மா மறைவுக்கு பின் வீரமணியின் ஆட்டம் கட்சியில் ரொம்ப அதிகமாகிவிட்டது. அதனால் தான் சுயேட்சையாக நிற்கலாம் என களமிறங்குகிறேன் என்றார்.
ரமேஷ்குமார் நாளை வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் சுயேட்சையாக களமிறங்கும் பட்சத்தில் அதிமுக வாக்குகள் மூன்றாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தகவலைக் கேள்விப்பட்டு திமுக தரப்பில் சந்தோஷமாகவுள்ளனர்.