தந்தை செல்போனை பறித்துக் கொண்டதால் காரைக்குடியில் மாணவி ஒருவர் வீட்டு மாடியின் மீதிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் குடும்பத்துடன் கலைஞர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுநரான ரவிச்சந்திரனின் மகள் பள்ளி முடித்துவிட்டு இந்தாண்டு கல்லூரியில் இணைய உள்ளார்.
அதிக நேரம் செல்போனை பயன்படுத்தியதாக ரவிச்சந்திரன் தனது மகளை கண்டித்ததாகவும் செல்போனை வாங்கி வைத்ததாகவும் தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று, தான் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். பெற்றோர், அங்கிருந்தவர்கள் என அனைவரும் பேசியும் மாணவி கீழே இறங்க மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மாணவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் மாடிக்குச் சென்ற காவல்துறையினர் மாணவியை மீட்க முயற்சிக்க, அவர் கீழே குதிக்க முயன்றுள்ளார். உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டனர். தொடர்ந்து மாணவிக்கு அறிவுரைகள் சொல்லி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்தான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.