Skip to main content

திருடுபோன 1200 சிலைகளில் 56 சிலைகள் கண்டுபிடிப்பு!

Published on 25/01/2018 | Edited on 26/01/2018

திருடுபோன 1200 சிலைகளில்
 56 சிலைகள் கண்டுபிடிப்பு! 

15 ஆண்டுகளில் 1200 சிலைகள் திருடப்பட்டதாகவும், அதில் 56 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலைய துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிலைக்கடத்தல் வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து கோவில்களில் சிலை கடத்தலை தடுக்க பல்வேறு உத்தரவுகளையும் நீதிபதி மகாதேவன் பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலைய துறை ஆணையர் ஜெயா நேரில் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில்,  கடந்த 1992 முதல் 2017 வரை 387 கோவில்களில் இருந்து 1204 சிலைகள் திருடப்பட்டுள்ளன எனவும், இதில் 56 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 18 சிலைகள் சம்பந்தப்பட்ட கோவில்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் கோவில்களில் சிலைகள், நகைகளை பாதுகாக்க அலார வசதியுடன் தனி அறைகள் கட்டப்பட்டுள்ளன எனவும், இந்த கோவில்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் தரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளதால்,  சக்தி வாய்ந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி. கருத்துக்களை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்