ஐம்பது வருடங்களுக்கு மேலாக அரசியலில் இருந்து வரும் அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சியை மட்டுமே வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்ததின் பேரில் தான் அதிமுக கோட்டையாக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை திமுக கோட்டையாக உருவாக்கி இருக்கிறார். அதுபோல் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழகத்திலேயே முதல் இடத்தை பிடிக்கும் அளவிற்கு அதிக வாக்குகளையும் திண்டுக்கல் மாவட்டம் பெற்று சாதனை படைத்தும் வருகிறது.
அதேபோல் தனது ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 1989ம் ஆண்டு முதல் 2021 வரை போட்டியிட்டு வந்ததின் மூலம் கடந்த தேர்தலில் ஆறாவது முறையாக வரலாறு காணாத வெற்றியையும் பெற்றிருக்கிறார் அந்த அளவிற்கு 1லட்சத்து 35 ஆயிரத்தி 571 வாக்குகள் கூடுதலாக பெற்று சட்டமன்ற தேர்தலில் தனி முத்திரை பதித்தார். முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்வையில் கூட்டுறவு துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நலன் கருதி எண்ணற்ற நலத்திட்டங்களைக் கொண்டு வந்தார். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்தி மேல்நிலைப் பள்ளிகளாக கொண்டு வந்தார்.
இதன் மூலம் பள்ளி படிப்பு படிக்கும் மாணவர்களின் தரம் உயர்ந்தது. அதுபோல் ஆத்தூர் தொகுதியில் உள்ள மாணவ - மாணவிகள் கல்லூரி படிப்பிற்காக திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி செல்வதை அறிந்த அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியில் கூட்டுறவுத்துறை மூலம் கல்லூரி கொண்டு வர முடிவு செய்தார். அதுபோல் ரெட்டியார்சத்திரத்திலும் மற்றொரு கலைக்கல்லூரியையும் கொண்டு வர முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து தான் ஆத்தூர் தொகுதியில் இரண்டு கல்லூரிகளையும் அமைச்சர் கொண்டு வந்து இருக்கிறார். இதில் கடந்த 2022ம் வருடம் செப்டம்பர் மாதம் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அந்த முதலாமாண்டில் 270 மாணவர்களில் 80 பேர் மாணவியர்கள் 2ம் ஆண்டில் 2023 சேர்க்கப்பட்ட 320 மாணவர்களில் 110பேர் மாணவியர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
இந்த 2024ம் ஆண்டில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதன்மூலம் முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு வரை 1200 மாணவ-மாணவிகள் இந்த கூட்டுறவு கல்லூரியில் படித்து வருகிறார்கள். இப்படி படிக்கக் கூடிய மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தையும், செமஸ்டர் கட்டணத்தையும் அமைச்சர் ஐ.பெரியசாமியே கட்டி வருவதின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பல லட்சங்கள் மாணவ-மாணவர்களின் கல்விகட்டணத்திற்கு செலுத்தி வருகிறார். இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து போவதுடன் சரியே தவிர எந்த ஒரு பீசும் கட்ட தேவையில்லை. அந்த அளவுக்கு மாணவ- மாணவிகளின் கல்வி அறிவிற்காக அமைச்சர் ஐ.பெரியசாமி பெரிதும் உதவியாக இருந்து வருகிறார். அதைக் கண்டு மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் நேரடியாகவே அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து தங்கள் பிள்ளைகளுக்கு கல்லூரி கட்டணம் கட்டியதற்கு நன்றி தெரிவித்தனர்.
அதோடு ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி தொடங்கும்போது புதிய மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தானே சென்று அந்த மாணவ-மாணவிகளின் கல்லூரியில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தையும் வாங்கி சேர்த்து வருகிறார். அந்த அளவுக்கு அரசு கல்லூரியில் மாணவ- மாணவிகள் அதிக அளவு படித்து பயனடைய வேண்டும் என்பதும் அமைச்சரின் விருப்பமாக இருந்து வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளில் வரலாறு, கூட்டுறவு, பொருளியல், தமிழ், வணிகவியல், கணினியியல் (பி.காம்.சிஏ), வணிக மேலாண்மை படிப்பிற்கான வகுப்புகள் உள்ளன.
இந்த ஆண்டு முதல் இளங்கலை ஆங்கிலம், ஐ.டி, இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், படிப்பிற்கான பாடப்பிரிவுகளும் தொடங்கி உள்ளன. தற்போது தனியார் கல்லூரியான ஜெயின் கல்லூரி வளாகத்தில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமியின் முயற்சியின் மூலம் ஆத்தூர் ஒன்றியமான சீவல்சரகு ஊராட்சி பகுதியில் கூட்டுறவு துறை சார்பாக புதிதாக ரூ.98 கோடி மதிப்பில் சுமார் 8 ஏக்கரை அமைச்சர் ஐ.பெரியசாமி தனது சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் கல்லூரி சென்னையில் உள்ள ஐ.டி.பார்க் போல் கட்டப்பட்டு வருகிறது.
குறிப்பாக புதிய கல்லூரியில் நிர்வாக அலுவலகம், ஆசிரியர்கள் ஓய்வறை, மாணவர்களுக்கு 40 வகுப்பறைகள், கணிணி லேப், பிரம்மாண்டமான நூலகம், வேதியியல், இயற்பியல், உயிரியலுக்கான ஆய்வகங்கள், கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேர் அமரக்கூடிய மிகப்பிரம்மாண்டமான உள்ளரங்கம், மாணவர்கள் விளையாட சிறந்த விளையாட்டு மைதானத்துடன் கட்டப்பட்டு வருகிறது. கட்டிட பணிகள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தவிர கல்லூரி தேசிய நான்கு வழிச்சாலை பகுதியில் அமைந்திருப்பதால் பிரம்மாண்டமான நுழைவு வாயில் சிறந்த கட்டிடக் கலைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகளே மிஞ்சி போகும் அளவிற்கு அதிநவீன வசதிகளுடன் கூட்டுறவு கல்லூரி அமைய இருக்கிறது. இக்கல்லூரி வரும் ஆண்டு முதல் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் முயற்சி எடுத்து அதற்கான பணிகளையும் அசுர வேகத்தில் உசுப்பிவிட்டு வருகிறார். அதன்மூலம் வரும் ஆண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட இருக்கிறது.
இது சம்பந்தமாகக் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் நிலக்கோட்டை மற்றும் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் கேட்டபோது... நாங்கள் எல்லோருமே கூலித் தொழிலாளியின் பிள்ளைகள் தான். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவிற்கு எங்களுக்கு வசதி இல்லாமல் தான் இருந்தது. இருந்தாலும் அப்படி தனியார் கல்லூரியில் சேர்ந்திருந்தால் வருடத்திற்கு ரூ.25ஆயிரம் வரை செலவாகும். ஆனால் எங்க அமைச்சர் அரசு கல்லூரி தொடங்கியிருப்பதைக் கண்டு இங்கு சேர்ந்தோம். சேர்ந்ததிலிருந்து எங்களுக்கு கல்லூரி கட்;டணம் மற்றும் பரீட்சை கட்டணம் எல்லாம் அமைச்சரே தனது சொந்த பணத்தில் கட்டி விடுகிறார். இது எங்களுக்கு மட்டுமல்ல கல்லூரியில் படிக்கும் ஒட்டுமொத்த மாணவ- மாணவிகளுக்கும் பணம் கட்டி வருகிறார். அந்த உதவியை எங்க வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். அதுபோல் கல்லூரிக்கு வந்து போகும் போக்குவரத்து செலவு கூட இல்லை. இலவச பஸ் பாஸ் இருப்பதால் அதன்மூலம் வந்து சென்று வருகிறோம். அந்த அளவுக்கு எங்கள் படிப்பிற்கு அமைச்சர் உறுதுணையாக இருந்து வருகிறார். அதுபோல் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பது போல் எங்களுக்கும் முதல்வர் உதவித்தொகை கொடுக்கிறார். அதுபோல் புதிதாக கட்டப்பட்டு வரும் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடுத்த ஆண்டு அமைச்சர் திறக்க வேண்டும் அதன்மூலம் நாங்கள் புதிய கல்லூரியில் இரண்டாமாண்டு படிப்பை தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் இருந்து வருகிறோம். இந்த அளவுக்கு மாவட்டத்திலேயே எந்த ஒரு கல்லூரியிலும் இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாகக் கூட்டுறவு கல்லூரியை எங்கள் அமைச்சர் எங்கள் தொகுதியில் கொண்டு வந்து எங்களுக்கு மட்டுமல்லாமல் தொகுதி மக்களுக்கே பெருமை சேர்த்து இருக்கிறார். அந்த பெருமையை என்றென்றும் மறக்க மாட்டோம். விசுவாசமாக நாங்களும், எங்கள் குடும்பமும் இருப்போம் என்று கூறினார்கள்.
சின்னாளபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி மகள், “தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரின் ஏற்பாட்டால் எங்களை போன்ற ஏழை மாணவ-மாணவியர்களின் உயர்கல்வி கனவு நிறைவேறியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பெண்கள் கல்வியின் உயர்நிலை அடைவதற்காக மாதந்தோறும் புதுமைப்பெண் திட்டம் மூலம் வழங்கி வரும் ரூபாய் ஆயிரம் எங்களை போன்ற அடித்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது” என்றார்.
இதுதவிர எங்களுக்கு கல்லூரிக்கு வருவதற்குப் பேருந்தில் இலவச பயணம் மூலம் ஒரு பைசா செலவில்லாமல் கல்லூரிக்கு வந்து கல்வி கற்ககூடிய சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது பெண் சமுதாய முன்னேற்றத்திற்காகவும், பெண் இனத்திற்காகவும் எங்களை போன்ற ஏழ்மையான நிலையில் உள்ள பெண்களின் கல்வியை பாதுகாத்து வரும் தமிழக முதல்வர்க்கும், எங்கள் அமைச்சருக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்போம்” என்றார் இக்கல்லூரியில் படிக்கும் மாணவி இந்திராணி.
இது சம்பந்தமாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேட்டபோது, “நான் கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவியில் இருந்த போது முதல்வரின் ஆசியுடன் தமிழகத்திலே முதல் கூட்டுறவு துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வந்தேன். கல்லூரியை ஆத்தூர் ஒன்றியத்திற்குக் கொண்டு வந்து சீவல்சரகு ஊராட்சியில் அமைவதற்கு காரணம் என்னவென்றால் அந்த ஊராட்சியை சுற்றியுள்ள 8க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் மாணவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். ஒரு சில மாணவர்கள் காலையில் 4 மணிக்கு எழுந்து பூப்பறிக்கும் வேலைக்கு சென்று விட்டு அதன்பின்பு பள்ளிக்கு செல்வதை பார்த்திருக்கிறேன். இந்த கல்லூரியை இப்பகுதியில் அமைத்தால் இதனை சுற்றியுள்ள ஆத்தூர், வீரக்கல், வக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, என்.பஞ்சம்பட்டி, காந்தி கிராமம், அம்பாத்துரை, தொப்பம்பட்டி, செட்டியபட்டி, போடி காமன்வாடி, எஸ்.பாறைப்பட்டி, அக்கறைப்பட்டி, மற்றும் சின்னாளபட்டி பேரூராட்சி, சித்தையன்கோட்டை பேரூராட்சியை சேர்ந்த ஏழை மாணவர்கள் மற்றும் கைத்தறி நெசவு தொழிலாளர்களின் பிள்ளைகள் பயன் பெறுவார்கள் என்ற அடிப்படையில் முதல்வர் ஆசியுடன் இக்கல்லூரியை கொண்டுவந்தேன்.
இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நவீன வசதியுடன் கூடிய அரசு கல்லூரியில் படிக்கிறோம் என்பதை உணர்வார்கள். அதுபோல் வெளியூர்களிலிருந்தும், மற்ற மாவட்டங்களில் இருந்தும் மாணவ-மாணவிகள் சேர்ந்து வருகிறார்கள். புதிதாக கட்டப்பட்டு வரும் கூட்டுறவு கல்லூரியின் பணிகள் அடுத்த ஆண்டு முழுமையாக நிறைவடைவதின் மூலம் அதைக் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். அதை நானும், மாணவர்களுடன் மாவட்ட மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்” என்று கூறினார்.
ஆனால் ஆத்தூர் தொகுதி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு தனது சொந்த பணத்தில் பல லட்சங்களை தொகுதி மக்களுக்கு உதவி செய்தும் நல்லது கெட்டதில் தங்கள் வீட்டு பிள்ளை போல் கலந்து கொண்டு வருவதுடன் மட்டுமல்லாமல் தொகுதி வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டு வந்து அசைக்க முடியாத அளவிற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதி மக்களோடு மாணவ-மாணவிகளின் மனதிலும் இடம் பிடித்து இருக்கிறார் என்கின்றனர் தொகுதி வாசிகள்.