கரும்புக்கு விலை நிர்ணயித்திட வருவாய் பங்கீட்டு முறை அறிவிப்பை மாநில அரசு திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த அறிக்கை:
’’இனி மேல் மாநில அரசு, கரும்புக்கு பரிந்துரை விலையை (State Advised Price) அறிவிக்காது. டாக்டர்.சி.ரங்கராஜன் குழுவின் பரிந்துரைபடி வருவாய் பங்கீட்டு முறையில் கரும்புக்கு விலையை தீர்மானித்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது சர்க்கரை ஆலை முதலாளிகள் வலியுறுத்தி வந்த கோட்பாடாகும். ஆலையில் உற்பத்தியாகும் சர்க்கரை, பக்காஸ், மொலாசஸ் இவற்றை விற்று வரும் வருவாயில் 70 சதவீதத்தை கரும்புக்கு விலையாக தீர்மானிப்பார்கள். தமிழ்நாட்டில் கரும்பு பிழிதிறன் 9 சதவீதம் அளவில் இருப்பதனால் வருவாய் பங்கீட்டு முறையில் விலை நிர்ணயம் செய்திடும் போது, ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயத்திடும் விலையை விடவும் குறைவாகவே விலை கிடைக்கும்.
உற்பத்தி செலவு அதிகாரித்துள்ள நிலையில், கரும்பு விவசாயிகளுக்கு வருவாய் பங்கீட்டு முறை பலனளிக்காது. தமிழ்நாட்டில் 2012ல் 21 லட்சம் டன்களாக இருந்த சர்க்கரை உற்பத்தி 2016-17ல் 9.5 லட்சம் டன்களாக குறைந்துவிட்டது. வருவாய் பங்கீட்டு முறையை அமுல்படுத்தினால் கரும்பை விட்டு மாற்று பயிர்களுக்கு விவசாயிகள் சென்றுவிடும் நிலையே ஏற்படும்.
நாடுமுழுவதும் விவசாயிகள் விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதம் லாபம் வரும் வகையில் விலை நிர்ணயம் செய்திட எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை அமுலாக்கிட வேண்டுமென்று வலுவாக போராடி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு சாதகமாக வருவாய் பங்கீட்டு முறையை அமுல்படுத்துவோம் என்று அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பானது. மேலும், தனியார் ஆலைகள் தர வேண்டிய நான்கு ஆண்டுகால பாக்கி ரூ.1350 கோடியை பெற்றுத்தருவது குறித்தும், கூட்டுறவு, பொதுத்துறை ஆலைகள் தர வேண்டிய ரூ.215 கோடி பாக்கி குறிததும் அமைச்சர் எதுவும் கூறாதது வேதனையளிக்கிறது. எனவே, தமிழகத்தில் லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட வருவாய் பங்கீட்டு முறைப்படி கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்ற அறிவிப்பை மாநில அரசு திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
அரசின் இந்த முடிவை திரும்பப் பெறுகிற வரை கரும்பு விவசாயிகளை அணிதிரட்டி தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்படும். ரூ.1600 கோடி ரூபாய் கரும்பு பண பாக்கியை பெற்றுத்தர உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று மாநில அரசை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.’’