தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு கேட்க திருவாரூர் வந்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 45 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்திவரும் மக்களை சந்தித்து திட்டத்தை ரத்துசெய்ய குரல் கொடுப்போம் என்று உத்தரவாதம் கொடுத்தார்.

அங்கு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமிக மிக மோசமாக இருக்கிறது. அவர்கள் நிலை தற்கொலை செய்து கொள்ளும் நிலைதான் உள்ளது.
விவசாயிகள் டெல்லிக்கே சென்று போராடினர்கள், அதுவும் தன்மானத்தை இழந்து ஆடையே இல்லாமல் நிர்வாணமாக போராடினர். ஆனால் பிரதமர் மோடி அவர்களை சந்திக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகளையும், பணக்காரர்களையும், நடிகைகளையும் அழைத்து நேரடியாக பேசுகிறார்.
மோடி ஆட்சிக்கு வந்த இந்த ஐந்தாண்டு காலத்தில் விவசாயிகளை சந்திக்காத மோடி, தற்போது விவசாயிகளுக்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோம், மணலை கயறாக திரிப்போம் என கூறுகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்றார்கள் ஆனால் 15000 வேண்டாம்,1500 கூட வேண்டாம் ,வெறும் 15 ரூபாய் கூட ஒருவர் கணக்கிலும் போடவில்லை. அதேபோல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார் யாருக்காவது வேலைகிடைத்திருக்கிறதா. இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் என மீண்டும் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்.

ஆனால் திமுக சொன்னதைத் தான் செய்யும், செய்வதைத்தான் சொல்லும். கலைஞர் அவர்கள் விவசாய கடன் தள்ளுபடி என்று சொன்னார் அதேபோல் தள்ளுபடி செய்தார். விவசாயிகளுக்கு அனைவருக்கும் இலவச மின்சாரம் என்று வாக்குறுதி கொடுத்தார் கொடுத்தோம்.
இப்போதும் திமுக ஆட்சிக்கு வந்தால் சிறு குறு விவசாயிகள் கடனை ரத்து செய்யும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்தோம். முத்தரசன் உள்ளிட்ட அனைத்துக்கூட்டணிக்கட்சியினரும் அனைத்துவிவசாயக்கடணையும் ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை உடனே ஏற்று அறிக்கையில் திருத்தம் செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளேன். இதை கலைஞரின் பிறந்த ஊரான அவரின் உடன்பிறப்புக்களான உங்களுக்கு நானே நேரடியாக கூறியிருக்கிறேன். ஆக அனைத்து விவசாய கடனும் ரத்து செய்யப்படும் அதை உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கிறேன்.
மீத்தேன் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளும், விவசாய பெருமக்களும் கடுமையாக பாதித்து வருகின்றனர். இது குறித்து மத்திய அரசு, எடப்பாடி அரசு கவலை கொள்ளவில்லை. ஆனால் திமுக விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தும், வர விடாது." என்று உணர்ச்சி பொங்க பேசினார்.