மத உணர்வுகளைப் பாதிக்கும் விதத்தில் பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட செயலாளர் சையது இப்ராஹிம் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீமணவாள மாமுனிகள் ஜீயர் சுவாமி மடத்தின் 24-வது பீடம் சடகோப ராமானுஜருக்கு, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவிட்டதன் பேரில் வரும் 22-ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல் நிலையம்.
தற்போது விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இளைஞரணி அமைப்பாளர் சரவண கார்த்திக் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையத்தில் சடகோப ராமானுஜர் எழுதிய விளக்கக் கடித்தத்தை, ஜீயர் சார்பில் கொடுத்திருக்கிறார். அந்த கடிதத்தில் தேதி எதுவும் குறிப்பிடாமல் தனது லெட்டர் பேடில் கையெழுத்துக்குப் பதிலாக இடதுகைப் பெருவிரல் ரேகை வைத்து ஜீயர் அளித்திருக்கும் கடிதத்தின் விபரம் இதோ -
25-7-2019 அன்று சையத் அலி என்பவர் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் என் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நான் 22-7-2019 அன்று காஞ்சிபுரம் ஸ்ரீஅத்திவரதர் சம்பந்தமாக பேட்டி ஒன்றை தொலைக்காட்சிகளுக்கு கொடுத்தேன். அந்தப் பேட்டியில் 1600-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் முகலாயர் படையெடுப்பின் ஸ்ரீஅத்திவரதரைப் பாதுகாக்க குளத்தில் வைக்கப்பட்டார் எனவும், அது இப்போது தேவையில்லை. ஆகவே, ஸ்ரீஅத்திவரதரை மீண்டும் மக்கள் தரிசனத்திற்கு வெளியே வைக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால், தொலைக்காட்சியில் என் முழுக்கருத்தையும் பதிவு செய்யாமல், குறிப்பிட்ட கருத்தை மட்டும் எடுத்து ஒரு மதத்தை கூறியதை எழுதியுள்ளனர் மற்றும் காட்சிப்படுத்தியுள்ளனர். ஆனால், என் கருத்தானது திருவரங்கன் உலா, மதுரா விஜயம் என்கின்ற புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளது. மேலும், துண்டுப்பிரசுரமாகவும் வந்துள்ளது. மேலும், அந்த துண்டுப்பிரசுரத்தில் உள்ளதையும் இத்துடன் இணைத்துள்ளேன். மேலும், என் நோக்கம் எந்த இடத்திலும் எந்த மதங்களையும் இழிவுபடுத்துவது, பேசுவது எங்கள் நோக்கமல்ல என்பதையும் இதன்மூலம் தெரியப்படுத்திகொள்கிறேன். மேலும், தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் என் முழுக்கருத்துக்களை பதிவிடவும் இல்லை. தேவைப்பட்டால் மேற்குறிப்பிட்ட புத்தகங்களை ஆதாரமாகவும் கொடுப்போம் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். ஜெய் ஸ்ரீமந்நாராயணா.
அமைச்சர்களே, ’தமிழகத்தில் நடப்பது ஆன்மிக ஆட்சிதான்’என்கிறார்கள். ஜீயர் என்ன சாமானியரா? சடகோப ராமானுஜர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றெல்லாம் தமிழக காவல்துறை கறார் காட்டவா போகிறது? ஜீயர்கள் யாரும் கையெழுத்திடக் கூடாதாம். கைரேகைதான் வைக்க வேண்டுமாம். ஜீயர்கள் கடைப்பிடித்துவரும் ஆன்மிக சம்பிரதாயத்தில் மிக உறுதியாக இருக்கும் சடகோப ராமானுஜருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யார் எடுத்துச்சொல்வது?