குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் பணிகள் துவக்கப்பட்டு ஆங்காங்கே பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் குடிமராமத்து பணி சிறப்பு அலுவலர் விஜயராஜ் ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பணிகள் நடைபெறும் பகுதியான சிதம்பரம் அருகே துணிசிரமேடு மற்றும் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் சிறப்பு அதிகாரி விஜயராஜ் உள்ளிட்ட பொதுப்பணிதுறை, வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறுகையில், "தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் ரூ9.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 116 பாசன வாய்க்கால்கள் 430 கிலோமீட்டர் தூரம் தூர்வாரப்படும். இந்தாண்டு உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். எனவே குடிமராமத்து பணிகள் சுணக்கம் இல்லாமல் தரமாக உத்தரவாதத்துடன் செய்யப்பட்டுள்ளதா என்பதை அலுவலர் விஜயராஜ் ஆய்வு செய்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி இந்த குடிமராமத்து பணிகளை அந்தந்த பகுதியில் உள்ள பாசன வாய்க்கால் விவசாயிகள் குழுக்கள் செய்கின்றது. இதனால் இந்த பணிகளை தரமாக செய்யமுடிகிறது. இதில் அரசு எந்த பணிகளையும் செய்வதில்லை. தொழில் நுட்ப சம்பந்தமான அறிவுரைகளை மட்டுமே வழங்கி வருகின்றது. பணிகள் அனைத்தும் துவக்க நிலையில் உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கரானா வைரஸ் கட்டுக்குள் உள்ளதால் விவசாய பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுவதால் ஜூன் 25க்குள் இந்த பணிகள் முடிக்கப்படும். சென்ற வருடம் 532 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரப்பட்டது. விவசாயிகள் ஒற்றுமையாக இருந்து தூர்வார வேண்டும். கடலூர் மாவட்டத்திற்கு உண்டான குடிமராமத்து சிறப்பு தொகுப்பு நிதி ஒதுக்கீடு விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என கூறினார். இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் விசுமகாஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர் அருணகிரி, துணிசிரமேடு ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.