தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சென்னையில் கடந்த காலங்களில் 13 செ.மீ. மழைக்கே 3 நாட்கள் ஸ்தம்பித்திருந்த நிலையில், தற்போது மழை பெய்த 12 மணி நேரங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
இதற்குத் தமிழக முதலமைச்சரின் போர்க்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஃபெஞ்சல் புயல் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு மீது எதிர்க்கட்சிகள் அவதூறு கருத்துக்களை வீசுகின்றனர். சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு கொடுத்து படிப்படியாகத் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
எதிர்க்கட்சித் தலைவர் மனசாட்சியோடு பேச வேண்டும். உண்மையிலேயே எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும். எடப்பாடி பழனிசாமி வாய்ச்சவடால் விடாமல், மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கித் தரட்டும். மக்கள் நலப் பணிகள் ஈடுபடுத்த வரை அச்சுறுத்துகிறார்கள். உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசி இருக்கிறார்கள். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புயலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையத்தை அளவிட முடியாத சூழல் இருந்தது. புயல் போக்கு கட்டியது என்பது உண்மைதான். புயலின் தாக்கத்தை வானிலை மையமே கணிக்க முடியாமல் தான் இருந்துள்ளது. எனினும், அரசு தயார் நிலையில் இருந்ததால் தான் பெரிய உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சேதம் இருந்தால் 2 நாட்களில் சரி செய்யப்படும். திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்படும். 40 லட்சத்துக்கு மேல் பக்தர்கள் கூடினாலும் வெற்றிகரமாகத் தீபத் திருவிழாவை நடத்துவோம். நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து வருங்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.