
சென்னை கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. இந்தப் புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டது. இந்தப் பேருந்து முனையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023ஆம் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதே சமயம் பயணிகளின் வசதிக்காகத் தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக வரும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி தமிழகத்தின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் நாளை மறுநாள் (04.03.2025 - செவ்வாய்க்கிழமை) முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனுடன் கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயண நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் மாநகர போக்குவரத்து சேவையைப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.