
தமிழகத்தில் அடுத்த வாரம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாக வேலை செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து காணொளிக் காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
திருப்பூர் மாவட்ட கட்சியினரிடம் நேற்று பிரச்சாரம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாநகரப் பகுதி நிர்வாகிகளிடம் காணொளி வாயிலாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, " திண்டுக்கல் எப்போதுமே திமுகவின் கோட்டை. கழகத்துக்கு எப்போதும் வெற்றியை பரிசாக கொடுக்கின்ற இடம் இந்த திண்டுக்கல். ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த மாவட்டம் புறக்கணிக்கப்பட்டது. எந்த ஒரு நலத்திட்டங்களும் இந்த மாவட்டத்தில் செயல்படுத்தவில்லை. முன்னாள் ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நலத்திட்டங்கள் தொடங்குவதற்கு கொடுக்கவில்லை. அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு என்பது ஊழலுக்கு அளிக்கும் வாக்கு என்பதை தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். எனவே இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு பெரிய வெற்றியை அளிக்க வேண்டும்" என்றார்.