கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலில் சிக்கியிருந்த 1000 க்கும் மேற்பட்ட பயணிகள் கடந்த மூன்று நாட்களாக உணவு, குடிநீர் இன்றி அவதி அடைந்தனர். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
அதே சமயம் ரயிலில் மீதமுள்ள 530 பயணிகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் ரயிலில் சிக்கியிருந்த ரயில் பயணிகள் மீட்கப்பட்டனர். 6 பேருந்துகள் மூலம் 400க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். தற்பொழுது மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை டெல்லியில் இருந்து வரும் ஒன்றிய குழு இன்று ஆய்வு செய்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்கள் கணக்கிடப்பட இருக்கிறது.