புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று (09.05.2021) 9,022 பேருக்குப் பரிசோதனை செய்ததில் கடந்த 24 மணி நேரத்தில் 1,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், புதுச்சேரியில் 1,260 நபர்கள், காரைக்காலில் 197 நபர்கள், ஏனாமில் 147 நபர்கள், மாஹேவில் 29 நபர்கள் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 14,034 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 56,710 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் புதுச்சேரியில் 22 பேரும், காரைக்காலில் 2 பேரும், ஏனாமில் ஒருவரும், மாஹேவில் ஒருவரும் என 26 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 965 ஆக உயர்ந்துள்ளது. இன்று சிகிச்சை பெற்று திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,158 ஆக உள்ளது. புதுச்சேரியில் இதுவரை கரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 2,14,794 ஆக உள்ளது.
இதனிடையே, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- “புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. எனினும், கரோனா தொற்று பரவல் குறையவில்லை. எனவே, கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளைக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்து, அந்தப் பகுதியில் உள்ள வழித்தடங்கள் அடைக்கப்பட்டு, பொதுமக்களின் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, புதுச்சேரி வட்டத்தில் 92 கட்டுப்பாட்டுப் பகுதிகள், உழவர்கரை வட்டத்தில் 101 கட்டுப்பாட்டு பகுதிகள், வில்லியனூர் வட்டத்தில் 51 கட்டுப்பாட்டுப் பகுதிகள், பாகூர் வட்டத்தில் 29 கட்டுப்பாட்டுப் பகுதிகள் என மொத்தம் 273 கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு பகுதிகளின் வரைபடங்கள் விவரம் வருவாய்த்துறையின் இணையதளம் (https://collectorate.py.gov.in, https:puducherry.dt.gov.in) மற்றும் கோவிட் டேஷ் போர்டிலும் (https://covid19dashboard.py.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்தப் பதிவினை கண்டு, அந்த கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கண்காணிக்க வருவாய்த்துறையின் மூலம் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையும் ரோந்து பணியின்போது, இந்தப் பகுதிகளைக் கண்காணிப்பர். கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 8ஆம் தேதிவரை 2,053 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் வசிப்போருக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படுகிறது. கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மருத்துவம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய 104, இதர குறைகளுக்கு 1070, 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.