இன்று (04.03.19) தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து தொகுதி கையெழுத்து ஒப்பந்தமானது. அதில் விடுதலைச் சிறுத்தைக் கட்சிக்கு 2 தொகுதிகள் கொடுக்கப்பட்டு சுமூக ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதன் பின்பு கட்சி நிர்வாகிகளிடையே பேசிய தொல்.திருமாவளவன் கூறியதாவது -
”இன்றைய அரசியல் சூழ்நிலையில் நம் கட்சித் தொண்டர்கள் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப சமூக வலைத்தளங்களில் அவரவருக்குத் தோன்றும் கருத்துகளைப் பதிவிடக் கூடாது. என்றும் கட்சி தலைமைக்கு அனைவரும் கட்டுப்பட்டு ஒரே பாதையில் பயணிக்க வேண்டும். மனதில் பட்டதெல்லாம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கவன ஈர்ப்புக்காக எதை வேண்டுமானாலும் பதிவிடலாம் என்று யாரும் அந்த மாதிரி செயல்களில் ஈடுபடக்கூடாது. அப்படி செயல்பட்டால் கட்சித் தலைமை மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது. அதனால் அந்த மாதிரி தான்தோன்றித்தனமாக செயல்களை செய்யக் கூடாது.
தேர்தல் வரட்டும் அந்த நேரத்தில் நாம் பேரம் பேசலாம் என்று இருக்கக் கூடியக் கட்சி நம் கட்சி அல்ல. பணத்துக்காகவும் பதவிக்காகவும் கூட்டணி வைக்கின்ற கட்சி விடுதலை சிறுத்தைக் கட்சி இல்லை. ஒரு கொள்கைக்காகவும் சமூக நலனுக்காகவும் கூட்டணி வைக்கின்ற கட்சிதான் வி.சி.க. அகில இந்திய அளவில் ஒரு சில குறிப்பிட்ட கட்சிகள் இருந்தால் அந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என்று மிக தைரியமாக சொல்லக் கூடிய கட்சி நமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இப்படி கூறுவதால் பயனில்லாமல் போகலாம், இதனால் பாதிப்புகள் வரலாம். இதனால் பின்னடைவுகள் வரலாம், இறுதியில் வெற்றி அடையப்போவது விடுதலைச் சிறுத்தைகள்தான்.”