வாடிக்கையாளர் ஒருவரின் வங்கிக் கணக்கில் சுமார் 756 கோடி ரூபாய் இருப்பு உள்ளதாகக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் வீரப்புடையான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கோடக் மஹிந்திரா வங்கிக் கிளையில் சேமிப்புக் கணக்கு உள்ளது. இந்நிலையில் கோடக் மஹிந்திரா வங்கியில் இருந்து கணேசனுக்கு நேற்று குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் அவரது வங்கிக் கணக்கில் சுமார் 756 கோடி ரூபாய் இருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு கணேசன் அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து கணேசன் இன்று காலை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்று ஊழியர்களிடம் இது குறித்து விசாரித்துள்ளார். அதற்கு ஊழியர்கள் தரப்பில் இருந்து உரிய விளக்கம் ஏதும் அளிக்காமல் இது குறித்து விசாரணை செய்வதாகக் கூறி அவரின் குறுஞ்செய்தி தொடர்பான தகவல் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு கணேசனை அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாகச் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வங்கிக் கணக்கில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியிலிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.