Skip to main content

பட்டாசு ஆலையில் பெண் ஊழியர் ஆட்டம்! 'ஆபத்தை' உணரவில்லையே?

Published on 11/03/2020 | Edited on 12/03/2020

‘ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது! அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகு இருக்காது!’- நாட்டுப்புறப் பாடலொன்றின் வரிகள் இவை!
 

சில வேலைகளைச் செய்பவர்கள் பாடிக்கொண்டே செய்வதை நாம் பார்த்திருப்போம். தாங்கள் பார்க்கின்ற வேலையை, அது ஒரு வேலை என்பதே தெரியாமல், எளிதாகவும் இன்பமாகவும் செய்வதற்காகத்தான், பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வேலை செய்கிறார்கள்.  
 

ஆட்டமும் பாட்டமுமாக வேலை செய்வது எல்லா வேலைகளுக்கும் சரிவராது. குறிப்பாக,‘அபாயகரமான தொழில்’ என்று தொழிற்சாலை சட்டமே வரையறுத்துள்ள, பட்டாசுத் தொழிலுக்கு முற்றிலும் பொருந்தாது. 

SIVAKASI WOMEN EMPLOYEE DANCE VIRAL VIDEO IN SOCIAL MEDIA

பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு கொத்துக்கொத்தாக உயிர்கள் மடிவதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. பணியில் அலட்சியம், தவறாகக் கையாளும்போது ஏற்படும் உராய்வு, அனுமதிக்கப்படாத ஃபேன்சி ரகப் பட்டாசுகளைத் தயாரித்தல், உற்பத்தியை அதிகரிப்பதற்காக விதிமீறலாக அளவுக்கு அதிகமான ஊழியர்களை வேலை வாங்குதல் என வெடி விபத்துகளுக்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 
 

கடந்த பிப்ரவரி 19- ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம்- சாத்தூர் வட்டம்-  சின்னக்காமன்பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 6 பேர் பலியானார்கள். இதுபோன்ற விபத்துகள்,  பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் மனதில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது போலும். அப்படித்தான் நினைக்கத் தோன்றியது - பட்டாசு ஆலை ஒன்றில் பெண் தொழிலாளர் ஒருவரின் குத்தாட்டத்தை வீடியோவில் பார்த்தபோது. 
 

பட்டாசுத்திரி தயாரிக்கும் அறையில், சக பணியாளர்கள் உற்சாகப்படுத்த,‘மொச்ச கொட்ட பல்லழகி’ என்ற பாடல் செல்போனில் ஒலிக்க, அந்தப் பெண் அப்படி ஒரு ஆட்டம் போடுகிறார். ஆண்- பெண் பேதம் பார்க்காமல், அந்த அறையில் தன்னுடன் வேலை பார்ப்பவர்களை ஆட்டத்தின் மூலம் சீண்டி சிரிக்க வைக்கிறார். இதை செல்போனில் வீடியோ எடுத்த பட்டாசுத் தொழிலாளி ஒருவர் பலருக்கும் இதை ‘ஷேர்’ பண்ணியிருக்கிறார். 
 

பட்டாசுத் தொழில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று அரசுத்தரப்பில் சம்பிரதாயமான கூட்டங்களை நடத்துவதோடு சரி. அதன் விளைவுதான், தாங்கள் பார்க்கின்ற தொழில் அபாயகரமானது என்பதை, பட்டாசுத் தொழிலாளர்களே சரிவர உணராமல் இருப்பது. ஏதோ ஒரு பட்டாசு ஆலையில், யாரோ ஒரு பெண் ஊழியர், வேலை செய்யும் இடத்தில் ஆட்டம் போட்டார் என்பதற்காக, ஓட்டுமொத்த தொழிலாளர்களையும், அதே பார்வையில் பார்க்கக்கூடாதுதான். ஆனால், மனித உயிர்கள் மலிவானவை அல்லவே!

 

சார்ந்த செய்திகள்