தொடர்ச்சியாய் பகலில் கண் வைத்து, இரவினில் சென்று கடைகளை உடைத்துத் திருடும் வெளிமாநிலத் திருட்டுக் கும்பலை பொறி வைத்து பிடித்து சப்தமேயில்லாமல் சாதனை செய்துள்ளனர் தேவக்கோட்டை குற்றப்பிரிவுப் போலீசார்.
நடப்பு வாரத்தில் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைப் பகுதியில் வானவில் ஷாப்பிங்க் சென்டர், அதற்குப் பக்கத்திலுள்ள மெட் ப்ளஸ் மருந்தகம் மற்றும் டீக்கடை, காரைக்குடியில் செக்காலை ரோட்டிலுள்ள அரிசிக்கடை ஆகியவற்றில் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு பணம் மட்டும் திருடப்பட்டிருந்தது. தேவக்கோட்டை மற்றும் காரைக்குடி என இரு ஊர்களில் வெவ்வேறு நாட்களில் சம்பவம் நடைப்பெற்றிருந்தாலும், சம்பவம் ஒரே மாதிரியாக நடந்தமையால் எஸ்.ஐ. மீனாட்சி சுந்தரம் தலைமையிலான தேவக்கோட்டைக் குற்றப்பிரிவுப் போலீசார் களத்திலிறங்கினர். அதன் பின்னரான விசாரணையின் இறுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்ய, கொள்ளைக்கும்பலில் இருந்தவர்கள் அத்தனைப் பேரும் வெளி மாநிலத்தார் என்பது தான் அதிர்ச்சியே.!
தனிப்பிரிவு அதிகாரி ஒருவரோ, " கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டு கைதுச்செய்யப்பட்டுள்ள விஜய் மாலிக், கணேஷ் மாலிக், சோஹைல் குலாம்பர்கத் மற்றும் அசோக் குமார் ஜெயின் ஆகியோரில் முதல் மூவரும் மகராஷ்டிரா மாநில எல்லைப்பகுதியிலுள்ள கர்நாடகாவின் குல்பர்காவினை சேர்ந்தவர்கள். மற்றொருவரான அசோக் குமார் ஜெயினோ ராஜஸ்தானை சேர்ந்தவன். இவன் மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் பெட்டிக்கடை வைத்துள்ளான். இதில் அசோக் குமார் ஜெயின் புகையிலை வழக்கில் மதுரை சிறைக்கு சென்ற வேளையில், அங்கு வேறொரு வழக்கில் கைதாகி வந்திருக்கின்றான் விஜய் மாலிக்.
அங்கேயிருந்த சிறை சவகாசம் வெளியிலும் தொடர மற்றையவர்களை இணைத்துக் கொண்டு கடந்த 2 வருடங்களாக 200க்கும் மேலான கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ள அனைவரும்.! இவர்களுக்கு சொந்தமான TN69W 9499 பதிவெண் கொண்ட சான்ட்ரோ காரில் ஒவ்வோரு ஊராக சென்று, அந்த ஊரில் தங்கி பகல் முழுவதும் ஊரை சுற்றி வலம் வந்து நோட்டமிட்டுக் கொண்டு, இரவு நேரத்தில் அந்தக் கடைகளை குறிவைத்து ஷட்டரை உடைத்து கொள்ளையடிப்பது வழக்கம்.
அதே வேளையில் பணம், நகையை தவிர வேறெந்தப் பொருளையும் கொள்ளையடிப்பது கிடையாது. இவர்கள் சிக்கியது எப்படியென்றால்..? காரைக்குடி மற்றும் தேவக்கோட்டைப் பகுதியில் கொள்ளையடிக்கும் போது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது இவர்களது உருவம். அதனைக் கொண்டு இதே சம்பவம் எங்கெங்கு நடைப்பெற்றது.? என்பதனையறிய இவர்கள் கொள்ளையடித்தது புலனாகியது. இங்கு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன், கடந்த 20ம் தேதி காரைக்குடி நூறடிச்சாலையிலுள்ள கோல்டன் சிங்கார் ஹோட்டலில் அறை எண் 22ல் தங்கியுள்ளனர் நால்வரும். தொடர்ச்சியான கொள்ளைக்குப் பிறகு 24ந் தேதி அறையை காலி செய்துவிட்டு புறப்பட்ட வேளையில் சிக்கிக் கொண்டனர்." என்கின்றார் அவர்.
வெளிமாநிலக் கொள்ளையர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் படி அடுத்தக்கட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தேவக்கோட்டைக் குற்றப்பிரிவுப் போலீசாரை வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளனர் பொதுமக்கள்.