
சமீபகாலமாகப் பணப்பரிவர்த்தனைகள் குறைந்து டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வருவதால் பணப்புழக்கம் குறையத் தொடங்கியுள்ளது. தொட்டதுக்கெல்லாம் ஆன்லைன்ல பணம் கட்டுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 3 மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ‘தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகம்’ சார்பில் ஏழை மக்களின் சேவைக்காக இயங்கும் சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ, எக்ஸ்ரே போன்றவற்றுக்குக் குறைந்த கட்டணம் பெற்றுக் கொண்டு துல்லியமான ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துக் கொடுக்கப்படுகிறது. அதனால் ஒரு நாளைக்கு ஒரு சேவை மையத்தில் குறைந்தது 200 பேராவது பயனடைந்து வருகின்றனர். ஆனால் கடந்த 3 மாதங்களாக இங்கு வரும் கிராமப்புற ஏழை நோயாளிகள் படாதபாடுபட்டு வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை எம்.ஆர்.ஐ ஸ்கேன்க்கு ரூ.2500, சி.டி. ஸ்கேன்க்கு ரூ.500, எஸ்ரே ரூ.50 என ஒவ்வொன்றுக்கும் நோயாளிகளிடம் விண்ணப்பம் பெற்றுக் கொண்டு அதற்குண்டான பணத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துக் கொடுத்தனர். புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அடுத்த நாளே ரிப்போர்ட் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 3 மாதமாக ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க அதற்குண்டான தொகையைப் பணமாக இல்லாமல் டிஜிட்டல் முறையில் போன் பே, ஜி பே மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டிருப்பதுடன் ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க வருபவர்களிடம் ஜிபே பண்ணுங்கள் என்று விரட்டப்படுவது பரிதாபமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் பல கிராமப்புற ஏழை நோயாளிகள் ஜிபே, கூகுள் பே இல்லாமல் ஸ்கேன் எடுக்காமலேயே திரும்பிச் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் நியாஸ் அகமது தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார். அதில், “சில நாட்களுக்கு முன்பு என் உறவினரை ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்ற போது தள்ளாத வயதிலும் தடுமாறி வந்த முதியவர்கள், கிராமப்புற பெண்கள் பணம் கொடுத்தா ஸ்கேன் எடுக்கமாட்டாங்களாம். என்னமே பேயில அனுப்பனுமாம் நாங்க எந்த பேய கண்டோம் என்று சொல்லிக் கொண்டு வந்தாங்க. அவங்க என்ன சொல்லிட்டுப் போறாங்கனு புரியாம ஸ்கேன் முன்பதிவு மையம் போய் பார்த்ததும் தான் புரிந்தது. யூபிஐ மூலம் மட்டும் பணம் கட்டணும் என்று பெரிய பதாகை வைக்கப்பட்டிருப்பது. அந்த வளாகத்தில் போன் வேலை செய்யாது கியூஆர் கோடு ஸ்கேன் செஞ்சுக்கும் வெளியில போய் ஜிபே அனுப்பிட்டு மறுபடி உள்ளே வந்து பணம் அனுப்பிட்டேன்னு ஸ்கிரீன்சாட் காட்டின பிறகு பதிவு செஞ்சு ஸ்கேன் எடுக்குறாங்க.அந்த சில மணி நேரத்தில் நான் சிலருக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் ஆன்லைன்ல பணம் கட்டி ஸ்கேன் எடுக்க உதவினோம். ஆனால் தினமும் 25, 30 பேர் திரும்பி போறதா சொல்றாங்க.
ஒன்றிய அரசு ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் உள்ளூர் சிறு வணிகர்களை முடக்கிப் போட்டது போல ஏழை மக்கள் முழுமையாகப் பயனடையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ சேவையையும் முடக்கிப் போட மறைமுகமாக இந்த யூ.பி.ஐ. திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இங்கே பணம் வாங்க மாட்டோம் என்று சொல்லும் போது எப்படியோ அவசரத்திற்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் வெளியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கு சென்று அதிக கட்டணம் செலுத்தி ஸ்கேன் எடுக்கச் செல்கிறார்கள். அதனால் தனியாரை வளர்க்கத் தான் அரசிலும் இந்த டிஜிட்டலோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழ்நாடு அரசு ஏழை நோயாளிகளை வஞ்சிக்காமல் கையில் பணம் இருந்தாலும் வாங்கிக் கொண்டு ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். டிஜிட்டல்மயம் ஏழை மக்களை எப்படி எல்லாம் பாதிக்கிறது. இந்த அவலம் புதுக்கோட்டையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவச் சேவைக் கழகத்திலும் நடக்கிறது. இதனைத் தமிழ்நாடு அரசு, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.