
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ், பேராசிரியர் சாலை கலையரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை வடமலாப்பூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெருமாள் சிலை ஒன்றைக் கண்டறிந்தனர். இவ்வூரைச் சேர்ந்த கருப்பையா என்பவர் கொடுத்த தகவலாவது, இச்சிலை ஆவாண்டு என்னுமிடத்தில் இருந்ததாகவும், தற்பொழுது சாலை ஓரத்தில் கிடப்பதாகவும் கூறினார்.
இச்சிலை பற்றி ஆய்வு செய்த காளிதாஸ் கூறியதாவது, “கி.பி 15 முதல் 16 ஆம் நூற்றாண்டளவில் பல்லவ மன்னர்கள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தனர். இச்சிலை பல்லவ பாணியில் கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது. இரு காதுகளிலும் அணிகலன் அணிந்து தொங்குகாதாகவும், பட்டுப் பீதாம்பரம், முப்புரி நூல், சங்கு, சக்கரம் போன்றவற்றையும், பொன்னும் வைரமும் பதிக்கப்பட்ட நீள் கிரீடத்தையும் அணிந்து வரத முத்திரையோடும் அபயமுத்திரையோடும் காட்சி தருகின்றார். கலை நயம் மிக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பெருமாள் சிலையை மாவட்ட நிர்வாகம் மீட்டெடுத்து அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்திப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.