![thi](http://image.nakkheeran.in/cdn/farfuture/4doWO9SNwYU9znXdQ66Pmj9yANpWUK3hkeUkNX4Pdc4/1541578928/sites/default/files/inline-images/thiruma_27.jpg)
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே சிறுமி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக அவர் இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ராஜலட்சுமி (14), கடந்த அக்டோபர் 22ம் தேதியன்று, பக்கத்து வீட்டைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரால் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திங்கள் கிழமையன்று (நவம்பர் 5) ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆத்தூர் அருகே பட்டியலின சிறுமி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை செய்வது தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றங்களை தடுத்திட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
வன்கொடுமை சட்டத்திலும், குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்படுபவர்கள் ஜாமினில் விடுவிக்கக் கூடாது என்ற நிலை இருக்கும்போது, அவர்களை ஜாமினில் விடுவித்து வருவது நீதித்துறையிலும் ஊழல் மலிந்து இருப்பதை காட்டுகிறது.
ஆத்தூர் சிறுமி படுகொலை செம்பவம் தொடர்பாக இதுவரை முதல்வர் கருத்து தெரிவிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. அவருடைய சொந்த மாவட்டத்திலேயே இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தும், அவர் பேசாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
வருகின்ற மக்களவை தேர்தலில் பாஜக அரசை வெளியேற்ற, மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். மூன்றாவது அணி உருவானால், அது பாஜகவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய ஜனநாயகத்திற்கும், தேசத்திற்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்.
தமிழகத்தைப் பொருத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியில் நீடிக்க விரும்புகிறது. 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம். திமுக மற்றும் தோழமை கட்சிகள் எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிக்கப்படும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாபோல், அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் மீது அவதூறு வழக்குப்பதிவு செய்வதை இந்த அரசு கையாண்டு வருகிறது. இந்த வழக்குகள் நீர்த்துப் போய்விடும்.
இலங்கையில் நடைபெறும் அரசியல் மாற்றங்களுக்கு சீனாவின் பங்கு உள்ளது. இது, இந்திய அரசுக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.