திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் எடப்பாளையம் பகுதியில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக துணி துவைக்கும் பவுடர்களும், லிக்யூடுகளும் தயாரித்து விற்று வந்த குடோனுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.
ஸ்ரீ ராம்நகர், புவனேஸ்வரி நகர், சாந்தி நகர் ஆகிய மூன்று இடங்களில் குடோன்கள் அமைத்து மிகவும் பிரபலமான நிறுவனத்தின் பெயர்களில் போலியான துணி பவுடர் மற்றும் லிக்யூட்களை தயாரித்து பருப்பு மூட்டைகளில் பேக் செய்து பருப்பு விற்பனை போலவே கள்ளத்தனமாக ஆந்திரம், கேரளா, கர்நாடகா, தமிழகம் என நான்கு ஆண்டுகளாக விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் அசல் நிறுவனத்தின் வழக்கறிஞரான பாலசுப்பரமணியத்திற்கு தெரியவரவே, முறைகேடாக நடைபெற்று வந்த குடோன்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு இதற்கு உரிமையாளர் யார் என்று கேட்ட போது அப்பகுதியிலுள்ள லோக்கல் டீலர்களுக்கு தொடர்பு கொண்டு அவர்களை வரவழைத்துள்ளார். உரிமையாளரின் பெயர் சொல்ல மறுத்த நிலையில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்த சூப்பர்வைசர் ரவி, மேனேஜர் சுரேஷ், வட இந்தியாவைச் சேர்ந்த மெஷின் ஆபரேட்டர்கள் 18 பேரையும் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதே போல, தலைமறைவான மூன்று உரிமையாளர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 60 லட்சத்திற்கும் மேலான மதிப்புடையப் பொருட்களை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.