
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து, பரந்தூரில் புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களை அண்மையில் சந்தித்திருந்தார். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் கடந்த 2ஆம் தேதி (02.02.2025) 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்த தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதனையடுத்து, த.வெ.க.வின் கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தார். அதன் பின்னர், கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கினார். இதற்கிடையே கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்தார். அதோடு பிரபல அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (26.02.2025) காலை நடைபெறவுள்ளது. இந்த விழாவையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், பிரச்சார சுற்றுப்பயணம், தேர்தலில் கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் விஜய் உரையாற்ற வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வானது மதியம் 01:30 மணி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க சுமார் 2500 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்ட நிர்வாகிகள், அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே விழா நடைபெறும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அக்கட்சியின் சார்பில் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 15 பேர் என்ற அளவில் சுமார் 2500 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழலில் தான் நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து விழாவில் பங்கேற்க விஜய் புறப்பட உள்ள நிலையில் அவர் வீட்டில் காலணி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் வீட்டில் காலணி வீசியவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என அங்கு இருந்தவர்கள் கூறுகின்றனர்.