Skip to main content

ஆட்டோ தொழிலாளி என்பதால் புறக்கணிப்பா?- நகர்மன்ற துணைத்தலைவர் குற்றச்சாட்டு

Published on 25/02/2025 | Edited on 25/02/2025
 Is he being boycotted because he is an auto worker? - City Council Deputy Chairman alleges

சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவர் ஆட்டோ தொழிலாளி என்பதால் பள்ளி விழா அழைப்பிதழில் பெயரை புறக்கணித்து அலட்சியப்படுத்தும் தலைமை ஆசிரியை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிதம்பரம் ரயிலடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.  இந்த பள்ளி 33 வது வார்டுக்கு உட்பட்டு உள்ளது.  இந்த வார்டின்  நகர்மன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்துகுமரன் உள்ளார். இவர் சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினராகவும் உள்ளார்.

பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வசதிகளையும் செய்து கொண்டு  ஆட்டோ ஓட்டும் தொழிலையும் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியை கண்ணகி இரு விதமான அழைப்பிதழை அச்சடித்துள்ளார். அதில் முத்துக்குமரன் பெயர் இல்லாத அழைப்பிதழை பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கியுள்ளார் என்றும்  பின்னர் முத்துக்குமரன் பெயரை அச்சடித்த அழைப்பிதழை அவருக்கு மட்டும் வழங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இந்த விழாவில் நகைக்கடை உரிமையாளர்கள், நகர்மன்ற தலைவர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதனையறிந்த நகர மன்ற துணைத் தலைவர் விழாவை புறக்கணித்துள்ளார்.

இதுகுறித்து முத்துகுமரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி இந்த பள்ளியில் தலைமை ஆசிரியை கண்ணகி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ராஜ்மோகன் ஏற்பாட்டில்  தமிழக அரசின் செயல்திட்டங்கள் மற்றும் தந்தை பெரியார் மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சியை சார்ந்த நிர்வாகி மணிவாசகத்தை அழைத்து தேசியக் கொடியை ஏற்ற வைத்தார். இந்த பகுதிக்கு வார்டு உறுப்பினராவும், நகர்மன்ற துணைத்தலைவரான எனக்கு அழைப்பு இல்லை. ஆனால் நான் தினந்தோறும் பள்ளியை பார்வையிட்டு பள்ளிக்குத் தேவையான சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து உதவிகளை செய்து வருகிறேன்.

இந்நிலையில் தற்போது பள்ளி ஆண்டு விழாவுக்கு இரு விதமான அழைப்பிதழை அச்சடித்து எனது பெயர் இல்லாமல் உள்ள அழைப்பிதழை அனைவருக்கும் வழங்கியுள்ளார். பெயர் உள்ள அழைப்பிதழை எனக்கு மட்டும் வழங்கியுள்ளார். இவர் தொடர்ந்து திட்டமிட்டு நான் ஒரு ஆட்டோ தொழிலாளி என்பதால் அலட்சியபடுத்தி வருகிறாரோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. எனவே இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் கல்வித்துறை அமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்ப உள்ளேன்'' என்றார்.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை கண்ணகியிடம் கேட்டபோது அழைப்பிதழில் பெயர் போட்டு தான் அச்சடித்துள்ளோம் என்றும் இது தவறான தகவல் என கூறினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எல்லப்பன் இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கிறோம். கடந்த 4 மாதமாக இதுபோன்ற அந்த பள்ளியில் தொடர்ந்து புகார்கள் வருகிறது. இதற்கு முன் அப்படி இல்லை என்றார். 

சார்ந்த செய்திகள்