நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் கடந்த சனிக்கிழமை மதியம், மாலை, இரவு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உணவகத்தில் உணவு சாப்பிட்ட நாமக்கல் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அந்தத் தனியார் உணவகத்தில் உணவருந்திய அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் உட்பட 13 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி, ஈரோடு, தருமபுரி எனப் பல இடங்களில் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய அசைவ உணவகக் கடைக்கு இறைச்சி சப்ளை செய்த இறைச்சிக் கடை உரிமையாளர் சீனிவாசனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.