ஓடும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகரை சேலம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்த கணவனும் அவருடைய கர்ப்பிணி மனைவியும் சென்னையில் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 5ம் தேதி சென்று இருந்தனர். பின்னர் அவர்கள் கடந்த 10ம் தேதி, சென்னையில் இருந்து நீலகிரி விரைவு ரயில் மூலமாக கோவை சென்றனர். அவர்கள் சென்ற அதே ரயில் பெட்டியில், கோவை மாவட்டம் இருகூரைச் சேர்ந்த திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரான சந்திரன் (65) என்பவரும் பயணம் செய்தார்.
கர்ப்பிணி படுத்திருந்த இருக்கைக்கு மேல் இருக்கையில் சந்திரன் படுத்து இருந்தார். நள்ளிரவு நேரத்தில், சந்திரன் தூக்கத்தில் இருந்த அந்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. அந்த ரயில் சேலம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்திரன் மீது சேலம் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
அப்போது பணியில் இருந்த தலைமைக் காவலர் கிருஷ்ணமூர்த்தி, இரண்டு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்தார். ஒரு கட்டத்தில் அவர்கள் சமாதானமாக செல்வதாக கூறியதால், அதை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டார். ஆனால், கோவை சென்ற பிறகு அந்த கர்ப்பிணியின் கணவர், கோவை ரயில்நிலைய காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து கோவை ரயில்வே காவல்துறையினர், சேலம் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து, கர்ப்பிணியின் கணவரை சேலத்திற்கு வரவழைத்த காவல்துறையினர் மீண்டும் எழுத்து மூலம் புகார் பெற்று, பாலியல் தொல்லை கொடுத்த சந்திரன் மீது எப்ஐஆர் பதிவு செய்தனர்.
இதையடுத்து ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி, மற்றும் காவலர்கள் இருகூர் சென்று சந்திரனை கைது செய்தனர். விசாரணையில் சந்திரனுடன் வந்த மற்றொரு நபரும் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து அவர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், கைதான சந்திரனை சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சந்திரனை வரும் ஏப்ரல் 11ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, கர்ப்பிணி அளித்த புகாரை சரிவர விசாரிக்காமல் சமாதானமாகப் போய்விடும்படி கூறிய ரயில்வே தலைமைக் காவலர் கிருஷ்ணமூர்த்தியை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து, ரயில்வே எஸ்பி ரோகித் நாதன்ராஜகோபால் உத்தரவிட்டார்.