ஈரோடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி - கவிதா அருண் வயது 20 தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் கருங்கல்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அருண் வண்டியை நிறுத்துமாறு போலீசார் கூற, ஆனால் அதை கவனிக்காத அருண் வேகமாக சென்று விட்டார்.
இந்நிலையில், நிற்காமல் சென்ற அந்த இரு சக்கர வாகனத்தின் பிதிவு எண்ணை வைத்து இளைஞர் அருண் முகவரியை தேடி எடுத்த கருங்கல்பாளையம் போலீசார் இளைஞர் அருண் மற்றும் அவரது பெற்றோர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துள்ளனர். அதன்பேரில், நேற்று கருங்கல்பாளையம் காவல்நிலையம் சென்றார்கள்.
அப்போது, பெற்றோர்கள் முன்னிலையிலே உதவி ஆய்வாளர் சத்தியசீலன் என்பவர் இளைஞர் அருணை ஏன்டா வண்டியை நிறுத்தாமல் சென்றாய் என்று கேட்டதோடு அடித்து உதைக்கவும் செய்துள்ளார். அருணை அடித்த போது பெற்றோர்கள் தடுத்தும் அதை பொருட்படுத்தாமல் அடித்துள்ளார். அதன்பிறகு போலீஸாரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மகனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
பெற்றோர் கண்முன்னே போலீஸ் தன்னை தாக்கியதில் கடும் மனவேதனை அடைந்த அருண் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கவனித்த பெற்றோர்கள் உடனடியாக அருணை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அருண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், கொதித்துபோன இளைஞர் அருணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அப்பாவி இளைஞரை அடித்து துன்புறுத்தியதால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என கருங்கல்பாளையம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.