
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் காளிஇன்பரூபன் ( 29). இவரது மனைவி மஞ்சுளா ( 28). இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் காளி இன்பரூபனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அதன் காரணமாக தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் திங்கட்கிழமை(12.5.2025) அன்று வழக்கம்போல் காளி இன்பரூபன் குடித்துவிட்டு வந்து மனைவி மஞ்சுளாவிடம் தகராறு செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கோவமடைந்த மஞ்சுளா, பரமத்தியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள தனது மாமா வீட்டிற்கு சென்று விட்டார். அதனால் காளி இன்பரூபன் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் மனைவி கோபித்துக்கொண்டு பிரிந்து சென்றதால் மன வேதனையில் இருந்த காளி இன்பரூபன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.