
குப்பைகளை வீசுவது தொடர்பான தகராறில் பெண் ஒருவரின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டம் கெவத்பரா பகுதியைச் சேர்ந்தவர் விம்லா தேவி. இவரது கணவர் ஆசிரியரான மனோஜ் சிங். விம்லா தேவிக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரரான ரஹ்னி ஜாவுக்கும் இடையே நீண்டகாலமாக பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட பிசிசி சாலையில் தண்ணீர் மற்றும் குப்பைகளை வீசுவது தொடர்பாக இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், விம்லா தேவியை கொலை செய்துவிட்டதாகக் கூறி வாளுடன் தும்கா நகர் காவல் நிலையத்தில் ஃபுல்சந்த் ஷா என்பவர் சரணடைந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் இருந்த வாளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், நேற்று இரவு 7 மணியளவில் விம்லா தேவிக்கும், ரஹ்னி ஜாவுக்கும் இடையே வழக்கம் போல் குப்பைகள் வீசுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தால் அங்கு நிலைமை மோசமடைந்தது. விம்லாவின் கணவர் மனோஜ் சிங், அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். இந்த சூழ்நிலையில் ஃபுல்சந்த் ஷா, தனது தந்தை லால்சந்த் ஷா மற்றும் இரண்டு சகோதரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். ரஹ்னி ஷாவுக்கு ஆதரவாக இருந்த ஃபுல்சந்த் ஷா, ஒரு வாளை எடுத்து விம்லா தேவியை தாக்கினார். மேலும், விம்லா தேவியின் தலையை ஒரே வெட்டில் துண்டித்தார். அதன் பின்னர் அவர், மனோஜ் சிங்கை தாக்கினார். இதில் மனோஜ் சிங்குக்கு பலத்த காயமடைந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, விம்லா தேவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த மனோஜ் சிங்கை சிகிச்சைக்காக புலோ ஜானோ மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். அந்த மருத்துவமனையில், மனோஜ் சிங் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றார்.