Skip to main content

மூத்த பத்திரிகையாளர் ’விசிட்டர்’ அனந்து மறைவு!

Published on 08/04/2018 | Edited on 08/04/2018
EDIT1-ANANDHU


மூத்த பத்திரிகையாளர் ’விசிட்டர்’ அனந்து சென்னையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

புலனாய்வு பத்திரிகைகள் கற்பனைக்கெட்டாத வளர்ச்சி பெறுவதற்கு முக்கய காரணமானவர் விசிட்டர் அனந்து. இவர் 1960களில் அரசியல் விமர்சனம், நையாண்டி, சமூகப் பிரச்சனைகளை பேசுவதற்காகவே ’கிண்டல்’ எனும் இதழைக் கொண்டுவந்தார். அந்த நேரத்தில் கிண்டல் இதழுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. எனினும் ஒரு கட்டத்தில் தொடர்ந்து நடத்த முடியாத காரணத்தினால் கிண்டல் இதழை நிறுத்தினார்.

பின்னர் ’துக்ளக்’ இதழில்’ தன் பணியை தொடர்ந்தார். அப்போது 'விசிட்டர் அனந்து' என்ற பெயரில் வெளியான புலனாய்வுக் கட்டுரைகள் அந்நாளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. தனது பரந்துபட்ட இதழியல் செயல்பாடுகளுக்கு ‘துக்ளக்’ இதழ் போதுமான தளமல்ல என்று கருதிய, அவர் அதிலிருந்து வெளியேறி 1980-ல் ‘விசிட்டர்’ இதழைத் தொடங்கினார். மக்கள் பிரச்சனைகள், அரசியல் தலைவர்கள் நேர்காணல்கள், புறக்கணிக்கப்பட்ட கிராமத்து அவலங்கள் என அதில் வெளியாகின. விசிட்டர் இதழில் ஏராளமான புதிய எழுத்தாளர்களுக்கு எழுத வாய்பளித்த பெருமையை கொண்டவர். பின்னர் நிர்வாகச் சிக்கல் காரணமாக விசிட்டர் இதழும் நின்றுவிட்டது.
 

Nakkheeran


புலனாய்வு இதழ்களின் முன்னோடியாக திகழ்ந்த ’விசிட்டர் அனந்து’ சென்னை கொட்டிவாக்கம் பத்திரிகையாளர் குடியிருப்பில் வசித்து வந்தார். சமீப காலமாக உடல்நலன் பாதிக்கப்பட்டு நடமாடமுடியாத நிலையில் இருந்த அவர் இன்று அதிகாலை 1 மணி அளவில் இயற்கை எய்தினார்.

மறைந்த புலனாய்வு இதழ்களின் முன்னோடியான விசிட்டர் அனந்துவின் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி சடங்கானது கோட்டுர்புரம் மயானத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெறுகிறது.

சார்ந்த செய்திகள்