ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் குற்றவியல் நீதிபதியாக இருப்பவர் ராஜவேல். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கோவையில் இருந்து சத்தியமங்கலம் நீதிமன்றத்திற்கு பணி மாறுதல் பெற்று இங்கு நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் வழக்கறிஞர்கள் இரண்டு பேருக்கு பாலியல் தொந்தரவு நீதிபதி ராஜவேல் கொடுத்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண் வழக்கறிஞர்களின் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். வாட்ஸ் அப் மூலமாகவும் பாலியல் ரீதியான உரையாடலை செய்துவந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பெண் வழக்கறிஞர்கள் இரண்டு பேரும் மாவட்ட தலைமை நீதிபதி்யிடம் எழுத்துப்பூர்வமான புகார் கொடுத்துள்ளார்கள். அதன்படி ஈரோடு மாவட்ட தலைமை நீதிபதி உமாமகேஷ்வரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகன் ஆகியோர் சத்தியமங்கலத்திற்கு நேரில் சென்று புகார் கூறிய பெண் வழக்கறிஞர்களை அழைத்து விசாரித்தனர். நீதிபதி ராஜவேல் பாலியல் துன்புறுத்தல் செய்தது உண்மை என ஆதாரப்பூர்வமாக தெரியவர, இன்று காலை மீண்டும் சத்தியமங்கலம் சென்ற தலைமை நீதிபதி உமாமகேஷ்வரி நீதிபதி ராஜவேலுவுக்கு சஸ்பெண்ட் உத்தரவை வழங்கினார்.
பணியில் உள்ள நீதிபதி, பெண் வழக்கறிஞர்களிடம் நடத்திய பாலியல் சீண்டல்கள் நீதித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.