ஈரோடு மாவட்டத்தில் நடந்த தொடர் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகளில் உள்ள குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் எஸ்.பி. சக்தி கணேசன்,ஈரோடு டவுன் டி.எஸ்.பி ராஜு மேற்பார்வையில் ஒரு தனிப்படையை அமைத்தார்.
இந்த தனிப்படையில் உதவி ஆய்வாளர்கள் சங்கர், சகாதேவன், பாலசுப்பிரமணியம் லோகநாதன், அறிவழகன் ஆகியோர் குற்ற வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஈரோடு சோலார் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர்வந்துள்ளனர்.

அந்த இருவரையும் பிடித்து விசாரித்த போது, அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சதீஷ் என்கிற வெங்கடேஸ்வரன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அய்யப்பன் என்பது தெரிய வந்தது. இவர்கள் கோபி காவல்நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 51 பவுன் நகைகள் போலீசார் மீட்கப்பட்டனர்.
அதேபோல் மாமரத்து பாளையம் பகுதியில் தங்கியிருந்த தஞ்சாவூரை சேர்ந்த முத்துராஜ், ராமநாதபுரத்தைச் சேர்ந்தமகேந்திரன், 18 வயது சிறுவன் ஒருவன் என மூவரையும் வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து 52 பவுன் நகைகளையும் போலீசார் மீட்டனர். அடுத்து சித்தோடு ஆப்பக்கூடல் ஆகிய காவல்நிலைய பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் தொடர்புடைய சென்னிமலையை சேர்ந்த பாலாஜியும் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 22 பவுன் நகைகளையும் மீட்டனர்.

பிடிபட்டவர்களிடம் மொத்தம் 125 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன இவற்றின் மதிப்பு ரூ 32 லட்சமாகும். இந்த குற்றவாளிகள் மீது ராமநாதபுரம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், வேலூர், கோவை போன்ற பல ஊர்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
இன்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மீட்கப்பட்ட நகைகளை பத்திரிகையாளர்கள் முன்பு போலீசார் காட்டினார்கள். போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க சிசிடிவி கேமரா தான் முக்கிய ஆதாரமாக எங்களுக்கு இருந்தது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும்" என்றார்கள்.