கல்வராயன் மலைப்பகுதியில் மான் வேட்டைக்குச் சென்றபோது கைதவறி நாட்டுத்துப்பாக்கி வெடித்ததில் தோட்டா பாய்ந்து, கூலித்தொழிலாளி பலியானார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கருமந்துறை கலகம்பாடியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் செல்வராஜ் (45). கூலித்தொழிலாளி. இவர், நேற்று மாலை (நவ. 23) அதே ஊரைச் சேர்ந்த நண்பர்கள் பெரியசாமி, பூச்சி ஆகியோருடன் கல்வராயன் மலைப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பூச்சியும், பெரியசாமியும் நேற்று இரவு செல்வராஜை சடலமாக கொண்டு வந்து வீட்டில் ஒப்படைத்துள்ளனர். நண்பர் ஒருவர் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் குண்டு பாய்ந்து, செல்வராஜ் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இத்தகவல், அந்த கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி சூர்யமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு மற்றும் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மான் வேட்டைக்குச் சென்றபோது நாட்டுத்துப்பாக்கி வெடித்ததில், செல்வராஜ் பலியாகி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
கலகம்பாடியைச் சேர்ந்த சிலர், அடிக்கடி கல்வராயன் மலைப்பகுதியில் மான் வேட்டைக்குச் செல்வது வழக்கம். இதற்காக அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கிகளை அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். நேற்று மாலை செல்வராஜ் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, ஒருவருடைய நாட்டுத்துப்பாக்கி கைதவறி வெடித்துள்ளது.
அந்த துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா, செல்வராஜ் மீது பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் பதற்றம் அடைந்த துப்பாக்கி வைத்திருந்த நபரும், கூட்டாளிகள் சிலரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
முதல்கட்டமாக பூச்சி (54), பெரியசாமி (55) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். பாண்டியன் என்பவர் கையில் வைத்திருந்த துப்பாக்கிதான் வெடித்தது என்பதும், அவர் சுட்டபோதுதான் தோட்டா பாய்ந்து செல்வராஜ் பலியானதும் தெரிய வந்துள்ளது. தலைமறைவான பாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.