மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த 2 புனிதத் தலங்களிலும் ஏராளமான பக்தர்கள் தினமும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிடப்பட்டு விழா நடத்தப்படும் எனத் தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திருப்பரங்குன்றத்துக்கு வந்த போது மலையில் அமர்ந்தபடி சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்து அமைப்பை சேர்ந்த பலரும் மதுரை பழங்காநத்தத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் நல்லிணக்கம், சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுவதால் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் நடைபோட்டு கொண்டிருக்கிறது. மனித வளம், தொழில் வளம் என அனைத்து தளங்களிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு இங்கு நிலவும் சமூக நல்லிணக்கமே காரணமாகும்.
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை விரும்பாத சனாதன சக்திகள் இங்கு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் சமய நம்பிக்கையோடு மட்டுமின்றி, சகோதரத்துவத்தோடும் தமிழர் என்ற உணர்வோடும் பல நூறு ஆண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் தம் தமது வழிபாட்டு தளங்களில் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். எப்படியாவது தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை மூட்டி தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க சனாதன கும்பல் திருப்பரங்குன்றத்தில் இந்த பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க சூழலை கெடுக்க முயற்சிக்கும் நாசக்கார சக்திகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். சுமார் 2000 ஆண்டுகளாக சமணம், வைணவம், சைவம் என அனைத்து வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள முருகன் கோவில் மிகவும் பழமையானது. கோவில் அமைந்துள்ள மலையின் உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. அதன் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவும் இருக்கிறது. தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு அப்படி நேர்த்திக்கடன் செய்யச் சென்ற இஸ்லாமியர் ஒருவரை காவல்துறையினர் தடுத்திருக்கிறார்கள். அதன்பின் வருவாய் வட்டாட்சியர் தர்காவில் ஆடு, கோழி பலியிடக் கூடாது என தடை விதித்திருக்கிறார். இதுதான் இந்த பிரச்சனைக்கு மூலக் காரணம் என தெரிகிறது. காவல்துறையினரும், வருவாய் வட்டாட்சியரும் தங்கள் விருப்பத்தின் பேரில் செயல்பட்டனரா? அல்லது தன்னால் வழங்கப்பட்டதா? என்பதை மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்த வேண்டும்.
சிக்கந்தர் தர்கா இஸ்லாமிய மக்களுக்கே சொந்தம் என்பதை நீதிமன்றம் நூறாண்டுகளுக்கு முன்பு உறுதி செய்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1923 ஆம் ஆண்டு பல்வேறு ஆவணங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த இந்தியாவில் 1975 ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் மீண்டும் அதே தீர்ப்பு கூறப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் வாழும் மக்கள் எவரும் இந்த பிரச்சனையை எழுப்பவில்லை. அவர்கள் நல்லிணக்கத்தோடுதான் வாழ விரும்புகிறார்கள். வெளியூரிலிருந்து இங்கு செல்லும் சமூக விரோத சனாதன கும்பல்கள் தான் கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறது. இந்த பிரச்சனையை மாவட்ட ஆட்சியர் சரியாக கையாளவில்லை. அவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு குறித்து தமிழக முதல்வர் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.