கரோனா தொற்றால் அனைத்துத் தொழிலும் முடங்கியுள்ள அதே வேளையில் விவசாயம் மட்டும் விதிவிலக்கா..? விவசாயிகளை அழிக்கும் நோக்கில் செயல்படும் பல வங்கிகள் உண்டு. வாங்கிய கடனுக்காக உயிரைவிட்ட பல விவசாயிகளின் கண்ணீர் கதை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
கரோனா தொற்று காரணமாக கட்டாயக் கடன் வசூலுக்குத் தடை உத்தரவுகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவித்த நிலையில், அதனை வங்கிகள் காதில் வாங்கியதாக தெரியவில்லை. அண்மையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழி கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்ற விவசாயிடம், குண்டர்களை வைத்து கடன் வசூல் செய்துள்ளது ஒரு தனியார் வங்கி. மேலும், கடன் தொகையைச் செலுத்த முடியாவிட்டால், 'நிலத்தை விற்றுப் பணத்தைக் கட்டு' என்று தாகாத வார்த்தையில் மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவசாயி தட்சிணாமூர்த்தி, "நான் பிறந்ததில் இருந்தே விவசாயி. இதைவிட்டால் எனக்கு வேறு வேலை தெரியாது. எனக்கு இருக்கும் பூர்வீக நிலத்தில் தொடர்ந்து பயிர் செய்து வருகிறேன். இந்தநிலையில் கடந்த ஆண்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 8 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் விவசாயக் கடன் வாங்கினேன். ஆறு மாததிற்கு ஒருமுறை 60,000 ரூபாய் தவணையும் கட்டி வந்தேன்.
கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று காரணமாக வருமானமே இல்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இந்தநிலையில், "கடந்த செப்டம்பர் 10 -ஆம் தேதி வங்கி அதிகாரி ஒருவர் பாலாஜி என்ற பெயரில் ரவுடி போல வந்து பணம் கட்டச்சொன்னார், நானோ வருமானமே இல்லை அரசு கூறியுள்ளதைப் போல, இரண்டு மாதம் கழித்து தவனைத் தொகையைக் கட்டுகிறேன் என்றேன். அந்த நபர் என் வயதைக் கூட பார்க்காமல் மிகுந்த கேவளமான வார்த்தையில் திட்டிவிட்டு, 'பணம் கட்ட வக்கில்லனா நிலத்தவித்து பணத்தகட்டு'னு மிரட்டினார்.
ஊரே பாத்துச்சு எனக்கு செத்துப் போயிடலாமானு தோனுச்சு. இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்துல புகார் கொடுத்தேன். உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் இதுவரை விசாரிச்சு வழக்குப் பதிவு செய்யாம காலம் தள்ளிட்டே இருக்காரு" என்றார்.
வழக்குத் தொடர்பாக கும்மிடிப்பூண்டி உதவி ஆய்வாளர் ராஜேந்திரனிடம் பேசினோம், "புகார் மனு மீது சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டுவிட்டது. விசாரணைக்காக இருதரப்பையும் அழைத்துள்ளோம் விசாரணைக்குப்பின் நடவடிக்கை எடுப்போம்” என்று தொடர்பைத் துண்டித்தார்.
மாவட்ட எஸ்.பி அரவிந்தனை தொடர்பு கொண்டோம், அவர் போன் பிஸி..!
இது தொடர்பாக வங்கி கலக்ஷன் டீம் வினோத்திடம் பேசினோம் "கடன் தவணைக் கட்டாதவர்கள் லீஸ்ட் எங்களுக்கு பேங்கில் இருந்துவரும். வசூல் செய்யறுது எங்க வேலை. மொதல்ல அவர்தான் தப்பா பேசியிருக்காரு. எங்க டெலிகாலர் போன்ல பேசினா நாங்க பொருப்பில்ல” என்றார் கனத்த குரலில். என்ன தான் சட்டம் போட்டலும் சரி, திட்டம் போட்டாலும் சரி விவசாயிகளின் பிரச்சனையில் கிணறில் விழுந்த கல் மாதிரி தான் போலீஸ் நடவடிக்கை.