தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானிலை மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், தேனி ஆகிய 10 மாவட்டங்களிலும் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையில் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பட்டாளம் பகுதியில் இரண்டாவது நாளாக நீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாளம் அங்காளம்மன் கோவில் தெரு பகுதியில் இரண்டாவது நாளாக இடுப்பளவிற்கான மழைநீர் தேங்கி நிற்கிறது. 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்த பகுதியில் வசித்து வரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கீழ்தளத்தில் இருக்கும் மக்கள் மாற்று இடங்களுக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. அங்காளம்மன் கோவிலுக்கு பின்புறத்தில் உள்ள கால்வாயில் வெளியேறக்கூடிய தண்ணீர் முறையாக செல்லாமல் இருப்பதே மழை நீர் தேங்குவதற்கான காரணம் என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, மழைக்கால மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவித்துள்ளார். மழைக்கால மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். சில இடங்களில் மழைநீர் வடிந்துள்ளது. மழை குறைந்ததால் தண்ணீர் வடிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். பட்டாளம் பகுதியில் மூன்று சமையல் கூடத்தில் இருந்து உணவு விநியோகம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இதேபோல் சென்னை மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். வட பெரும்பாக்கம் பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கத்திவாக்கம், மணலி புதுநகரில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கொளத்தூர், பெரம்பூர், அயப்பாக்கத்தில் தலா 22 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருவொற்றியூர், மணலி, அண்ணா நகர் மேற்கு, புழலில் தலா 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.