முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 'திராவிட மாடல்' கருத்தரங்கம் மாதவரத்தில் திமுக புழல் நாராயணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த திராவிட மாடல் கருத்தரங்கத்தில் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, ஆசிரியர் சுப.வீரபாண்டியன், மருத்துவர் நா.எழிலன் எம்.எல்.ஏ, நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
'நாடும் மதமும்' என்ற தலைப்பில் பேசிய சுப.வி, ''இது கூட்டம் இல்லை வகுப்பறை, நமக்கு எத்தனையோ அடையாளம் இருக்கிறது. மொழி இல்லாமல் வாழ முடியாது. ஆனால் மதம் இல்லாமல் வாழ முடியும். மதம் என்பது பழமையானது. நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது கடவுள். அந்த கடவுளின் பெயரில் மதம் உருவெடுக்கிறது. இயற்கைக்கு அப்பாற்பட்டு செயல்படுவதே கடவுள் என அனைவராலும் பேசப்படும் ஒன்று. இதற்கு எதிராக அறிஞர் ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் என்பவர் ஒரு பந்தை விசை கொண்டு மட்டையால் அடிக்கும்போது திசைமாறி பந்து எதிர் மறையாக செல்லுமா? என்றால், செல்லாது. அடிக்கும் திசையை நோக்கித்தான் செல்லும் என்றார். ஒருவேளை பந்து எதிர் மறையாக செல்லுமாயின் நானும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்கரம் இருப்பதாக நம்புகிறேன்.
மதம் என்பது பின்புறமாக இருந்து கொண்டு நம்மை வழிநடத்துகின்றது. பின்பு பலவகையான பிரச்சனையும் உண்டாக்கிறது. நாட்டில் மதம் இருக்கலாம் ஆனால் மதம் நாட்டை ஆளக்கூடாது. அப்படி மதம் ஆண்டால் இந்த நாடு நாசமாகிவிடும் என்பதற்கு தற்போதைய பாஜக ஆட்சியே சான்று. மதத்தை விட்டு வெளியில் வராவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் மதத்தின் பெயரால் பிரச்சனையை உருவாக்காமல் இருந்தாலே போதும்'' என்றார்.
டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ. 'நாடும் மொழியும்' என்ற தலைப்பில் பேசுகையில், ''23 சதவீதம் பேசும் இந்தி மொழியை ஒட்டுமொத்த நாட்டின் மொழியாக மாற்ற நினைப்பதை எப்படி ஏற்க முடியும். பல மொழிகளைக் கொண்ட நாட்டின் ஒற்றை மொழியைத் திணிப்பது உரிமை மீறல். தாய்மொழி மூலம் கல்வி கற்பிக்கும்போதே கற்றல் அனுபவம் அதிகம் பெற்று அறிவியல் ஆராய்ச்சி செய்ய முடியும் என்பதுதான் உண்மை. இணைப்பு மொழியாக ஆங்கிலம் மாற்றம் தாய்மொழி என இரண்டு இருந்தால் போதும் நாட்டின் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும் என்ற அடித்தளத்தை போட்டது திராவிடம். அந்த திராவிட மாடல் தற்போது இருக்கும் வரையிலும் இந்தியைத் திணிக்க முடியாது'' என்றார்.
'நாடும் ஏடும்' என்ற தலைப்பில் நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் பேசுகையில், ''இந்த கருத்தரங்கம் 'திராவிட மாடல்' என்பதே, அதில் எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு 'நாடும் ஏடும்'. முதலில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் என்பதே திராவிட மாடல். 14 வயதில் தமிழ் கொடியை கையில் பிடித்தவர் 94 வயதில் தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற பெருமையைத் தந்துவிட்டு சென்றுள்ளார். அதை கைவிடாமல் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்டி வருகிறார். கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றவுடன் ஸ்டாலின் தெரிவித்தது, 'எங்களுக்கு வாக்களித்த மக்கள் பெருமைப்படும் வகையிலும், வாக்கு செலுத்தாதவர்கள் நாம் ஏன் திமுகவிற்கு வாக்கு செலுத்தாமல் விட்டுவிட்டோம் என ஏங்கும் அளவிற்கு இந்த ஆட்சி செயல்படும்' என்றார். மக்களின் பிரச்சனைகளை களைய மக்களுடன் இருந்து செயல்படும் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். சமூக சிந்தனைகளுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் சிந்திக்க ஏடு முக்கியம். அதை நீங்கள் கையில் எடுத்தால் வெற்றி நிச்சயம். தலைமுறை தலைமுறையாக தேடித்தேடி திட்டங்களை செய்யும் இயக்கம் திமுக. கை ரிக்ஸா ஒழிப்பு, திருநங்கை என பெயர் சூட்டி நல வாரியம் அமைத்து பொருளாதாரம் பெற வழிவகை செய்தல் என பெருமை சேர்த்தவர் கலைஞர். அப்படி பெரியர், அண்ணா, கலைஞர் என அவர்களை தொடர்ந்து தற்போது முதல்வர் ஸ்டாலினும் வழிநடத்தி வருகிறார்'' என்றார்.