தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தோர், அவர்களுடன் பயணம் செய்தவர்கள் என அனைவரது விவரங்களையும் சேகரித்து, அவர்களையும் தனிமைப்படுத்தும் பணியை அரசு செய்துவருகிறது. அத்துடன் அவர்கள் வசிக்கும் பகுதிகள், அவர்கள் வேலைப் பார்த்த இடங்கள் அனைத்தையும் தனிமைப்படுத்தி, அவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பள்ளப்பன் தெருவில் வசிக்கும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அந்த பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.