'Heartbreaking...deepest sympathies...'-tvk leader Vijay Condolences

திருவண்ணாமலையில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டிருந்தது. மலை அடிவாரத்தில் இருக்கும் வ.உ.சி நகரில் மண்சரிவு ஏற்பட்டதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன.

20 மணி நேரமாகியும் உள்ளே சிக்கியுள்ளவர்கள் நிலை என்ன என தெரியாமல் இருந்த நிலையில் மீட்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தில் சிறுவனின் உடல் ஒன்று சிக்கியது. மீட்கப்பட்டது கௌதமன்(9) என்ற சிறுவனின் உடல் என்பது தெரியவந்துள்ளது. ஒரு சிறுவன், பெரியவரின் உடல் என இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மேலும் பல உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. உடல்கள் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளது திருவண்ணாமலை.

இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பதிவில்,'திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.

Advertisment

nn

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

Advertisment

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.