




சென்னை ஆழ்வார் திருநகரில் வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த தீட்சித் என்ற 8 வயது மாணவர் இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி பேருந்தில் சென்ற மாணவர் பேருந்திலிருந்து இறங்கி பள்ளி மைதானத்தில் நின்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மீண்டும் பேருந்தை நோக்கி சிறுவன் நகர்ந்துள்ளான். அப்பொழுது பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி நகர்த்தியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக மாணவன் தீட்சித் மீது பேருந்தின் சக்கரம் ஏறி சிறுவன் உயிரிழந்தான். மாணவனின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பள்ளி வளாகத்திலேயே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாகப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேலும் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தன் மகன் உயிரிழந்த தகவலை தங்களுக்கு பள்ளி நிர்வாகம் தெரிவிக்கவில்லை என மாணவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்ட அனைவரும் கைது செய்யப்படும் வரையில் தன் மகனின் உடலை வாங்கப்போவதில்லை என்று சிறுவனின் பெற்றோர் கூறியுள்ளனர்.