மயிலாடுதுறையில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி தலைகுப்புற விழுந்ததில் அந்த பகுதியில் சென்றபோது மக்கள் லாரியில் இருந்து வெளியேறிய டீசலை போட்டிப்போட்டுக்கொண்டு கேன்களில் பிடித்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பூங்குடி என்ற கிராமம் அருகே 6 ஆயிரம் லிட்டர் டீசலை எடுத்துக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திடீரென நிலைதடுமாறிய டேங்கர் லாரி வயலில் தலைகுப்புற விழுந்து டேங்கரில் இருந்து டீசல் வெளியேறியது. டீசல் ஏற்றிச்சென்ற லாரி தலைகுப்புற விழுந்தது தொடர்பான தகவல்கள் அந்த கிராமத்தில் பரவ, அப்பகுதி மக்கள் வாட்டர் பாட்டில்களில் போட்டிப் போட்டுக்கொண்டு டீசலை பிடித்துச் சென்றனர். இந்த விபத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர் சிறு காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள அரசு மணல் குவாரிக்கு தனியார் டீசல் விற்பனை நிலையத்திலிருந்து டேங்கர் லாரி மூலம் டீசல் எடுத்துச் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.