ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்து தொடங்கும் வனப்பகுதி பண்ணாரி இதிலிருந்து தாளவாடி மற்றும் கர்நாடகா மாநில காடுகள் தொடர்கிறது. இந்த காடுகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய், மற்றும் மான் போன்ற வன விலங்குகள் வசிக்கிறது. இதில் சிறுத்தையும், யானைகளும் அவ்வப்போது சாலைகளை கடக்கும்.
அப்படித்தான் ஒரு ஒற்றை யானை பண்ணாரி அருகே இன்று காலை சாலையை கடந்தது. அப்போது சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பண்ணாரி வனப்பகுதியில் குறிப்பாக யானைகள் அதிக அளவில் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் சாலையை கடந்து செல்வதோடு அவ்வப்போது பகல்நேரங்களில் சாலையோரம் நின்றபடி தீவனம் உட்கொள்வது வழக்கம்.
கடந்த ஒரு மாதகாலமாக கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் தாளவாடி பகுதியிலிருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு படையெடுத்து செல்லும் லாரிகள் சத்தியமங்கலம் நோக்கி செல்லும்போது லாரியிலிருந்து சாலையில் விழும் கரும்புத்துண்டுகளை தின்பதற்காக யானைகள் சாலையோரம் சுற்றித்திரிந்தபடி உள்ளன.
இன்று காலை கரும்புத்துண்டுகளை தேடிவந்த ஒற்றை யானை ஒன்று பண்ணாரி அருகே சத்தியமங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றதோடு நீண்ட நேரம் சாலையோரம் நின்றிருந்ததால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்ற பின் போக்குவரத்து சீரானது. சாலையோரம் நிற்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க அருகில் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.