விருத்தாசலம் அருகே அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய 100-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயத்தையே நம்பி வாழும் இந்த கிராம மக்களுக்கு நீர் ஆதாரமாக இருப்பது வெள்ளாறு மணல்படுகை ஆகும். மருங்கூர் கிராமத்தின் அருகே உள்ள கள்ளிப்பாடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அரசு மணல் குவாரி திறந்து வரையறுக்கப்பட்ட எல்லையுடன் மணல் அள்ளிய பின்பு குவாரியை முடிவிட்டனர். அதேசமயம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள அனுமதி கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், காவல்துறை மற்றும் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு மாட்டு வண்டிகள் மணல் அள்ள அனுமதித்தனர். அதேசமயம் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனுமதிக்கபட்ட எல்லையை விட்டு விட்டு, மருங்கூர் எல்லையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் ஒரே நேரத்தில் மணல் அள்ளி கொண்டு இருந்தன. இதனை அறிந்த மருங்கூர் கிராம மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகளை மறித்து சிறைப்பிடித்தனர். அதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.