தமிழக மக்களை ஏமாளிகளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்க்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், தனியாருக்கு விற்க கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்பணிகளை கைவிடக்கோரியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக அரசு ஜனநாயக ரீதியில் செயல்படாமல் தன்னிச்சையாக நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. மக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதால் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
முத்தலாக் சட்டம் நிறைவேற்றம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றியதை கண்டித்து வரும் 6ம் தேதி, கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகளை தடுக்க, அதிமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்களது ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் இருக்கிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்காக தமிழகத்தின் உரிமைகளையும், சொத்துகளையும் மத்திய அரசிடம் கொடுத்திட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளார்.
தமிழக மக்களை ஏமாற்ற அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. முத்தலாக் மசோதா விவகாரத்தில் மக்களவையில் அரசுக்கு ஆதரவும், மாநிலங்களவையில் எதிர்ப்பும் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளார்கள். தமிழக மக்களை ஏமாளிகளாக முதல்வர் எடப்பாடி பார்க்கிறார்கள். செயலற்ற நிர்வாகமாக இந்த ஆட்சி நடந்து வருகிறது. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார். போராட்டத்தில் காங்கிரஸ், இ.கம்யூ., கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.